உதய சூரியன்

உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில்
உதித்துவிட்டான் செங்கதிரோன்; தகத்தகாயம் பார்?
விலகிற்றுக் காரிருள்தான்; பறந்ததுபார் அயர்வு;
விண்ணிலெலாம் பொன்னொளியை ஏற்றுகின்றான் அடடா!

மிலையும் எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்!
மேலெல்லாம் விழி அள்ளும் ஒளியின் ப்ரவாகம்!
நலம் செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டி
நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை!

ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில்!
உயர்மலைகள், சோலை, நதி இயற்கை எழில்கள் பார்
களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால்
கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்!

தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி!
திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்;
ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில்
உயர்கின்றான்; உதயசூரி யன்வாழ்க நன்றே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:57 pm)
பார்வை : 27


மேலே