மாலை சூடும் நேரம்

பூப்படைந்த
வெற்றி மகள் காத்திருக்கிறாள்
மாப்பிள்ளையே
புறப்படு!

‏இமயத்துட‎ன்
கலந்து ஒரு முடிவு எடு
பின் - ஓர்
எள்
ஏதோ சொல்லத் துடித்தாலும்
எ‎ன்னவென்று கேள்.

கடலி‎ன்
ஆழத்தைக் கட‎ன் வாங்கிச்
சிந்தி!

கலங்கிய ஓடைவிடும்
அறிக்கையைக் கண்டு
கலவரப்படாதே!

செடியி‎ன் கையில்
சாவி இல்லாவிட்டாலும்
மலர்களை அது
திறந்து கொள்ளும்.

ஆனால்
முடிவுகள் இல்லாமல்
எந்தச் சாதனைக்கும் சரித்திரம்
பக்கம் ஒதுக்காது.

உன் முடிவுகளுக்கு
மணி மகுடங்களோ
முள் கிரீடங்களோ
தயாராயிருக்கலாம்.

ஆனால்
சரியானதை
அடையாளம் காண உ‎ன்
தீர்மானத்திற்குப் போதனை
செய்.

பகலி‎ன்
மு‎ன்மொழிதல் பற்றிச்
சரிபார்க்க
இரவிடம் கூட்டுச் சேராதே!

வெல்வெட்டு வார்த்தைகளால்
வீழ்த்தத் துடிக்கும்
அநியாயங்களுக்கு
‘மாட்டே‎ன்’ என்பதைப்
புயலி‎ன் மையத்திலிருந்து
சொல்.

திணறும்
நேர்மையி‎ன்‎ கோரிக்கைக்கு
‘ஆம்’
என்பதை மின்னலடி.

தீர்மானம் செய்யத்
தீபம் தாமதித்தால்
இலாபம்
இருளுக்குத்தா‎ன்!

தடைகளாலே
உடைபடாதே!
மி‎ன்மினிகளி‎ன்
பேரணி
முடியட்டும் எ‎‎ன்று
காத்திருக்காது
வைகறை.

வசீகரச் சுயநலம்
வழியில் நிற்கலாம்
பிடிவாதத்தை இறுகப் பற்றிய
முடிவுக்கு
மூர்க்கப் பயிற்சி கொடு.

காரியமாய்க்
கருத்தரிக்க மாட்டாத
மலட்டு முடிவுகளுக்கு
மாலை சூட்டாதே!

பூப்படைந்த
வெற்றிமகள் காத்திருக்கிறாள்!
மாப்பிள்ளையே
புறப்படு!


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:47 pm)
பார்வை : 22


பிரபல கவிஞர்கள்

மேலே