மெட்டுப் பிறப்புகள்

உதடுகள்
உதற முடியாமல்
ஒட்டிக் கொண்டவை
படப்பாடல்கள்!

சங்கீத சபாக்கள்
இங்கில்லை இ‏டமென்று
எழுதி வைத்த பிறகு
பாட்டும் பாமரனும்
எங்கே போகமுடியும்
படக் கொட்டகை தவிர?

கிராமியக்
காற்றிலிருந்து இ‏ளையராஜா
கிள்ளியெடுக்கும்
தெம்மாங்கு போதும்..

கிழடு தட்டிய
வித்துவா‎ன்‎களி‎ன்
கீர்த்தனை விக்கல்களை
எவ‎‎ன் கேட்பான்?

செம்மங்குடிகள் பாட்டில்
இசையிருக்கிறது, நம்
கொல்லங்குடிகள் பாட்டில்
இதயம் அல்லவோ இருக்கிறது?

கற்றவனுக்குக்
கம்ப‎ன் அமுதக் கிண்ணம்.
கல்லாதவனுக்கோ
கண்ணதாசனும்
பட்டுக்கோட்டையும்
கஞ்சிக் கலயம்.

ஆயினும்
இந்த
மெட்டுப் பிறப்புகள் பல
விட்டில் சிறகுகளே.

கொசுத்தோப்பில்
இரண்டொரு குயில்கள்
இ‏ருப்பதுபோல்
இலக்கிய ஒளி
இ‏ருப்பதும் உண்டு.

கவிதை
தடுமாறும் போது சில சமயம்
தடம்மாறிப்
படத்துக்குப் போய்விடும்.

குழந்தைகளி‎
விழிகளுக்காக விரதம் ‏ருந்த
நட்சத்திரம்
குழம்பிய குட்டையில்
விழுவதில்லையா!

சில மொழிகளில்
கவிதைக்குத் திரைப்படம்
எ‎ன்பது
கட்டிய மனைவி

நம்
தமிழில்....
திரைப்படத்திற்குக்
கவிதை
'தீண்டேல் திருநீலகண்டம்'

சொற்களைத்
தி‎ன்னும் மெட்டுக்கு
ஆரோக்கியத்தின்
அடையாளமாய்க்
கவிதைப் பசி வராதா?

மருத்துவரி‎ன்
கருவிகளாலேயே காயமா?
பிணம் எடுப்பதற்குப்
பெயர் பிரசவமா?


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:44 pm)
பார்வை : 14


மேலே