வண்ணச் சிறகாட்டு
**********************
வரவு சிலநூறு செலவு பலவாறு
வாழத் தகராறு வாழு வரலாறு
இரவு விடியாது இருளு மகலாது
ஈர நிலத்தோடு இருந்த விதையாகு
சிரம மெடுக்காது செதுக்க முடியாது
சீறு மலையோடு செலுத்து படகாகு
மரண வலியோடு மலரு மிதழோடு
மாற வழிகாணு மகிழு மனதோடு
*
கூண்டுக் கிளியாகிக் கொண்ட நிலையோடு
கூற முடியாத கொடியத் துயரோட
தாண்டுந் தடையாவும் தக்க பதில்கூறும்
தாக மதுதீரத் தண்ணீர் வரமீயும்
மீண்டு எழவேண்டு மிதயத் துடிப்போடு
மீறு முனதான மீட்சி யதனோடு
வேண்டு வனவேண்டி வேக நடைபோடு
வேத னைகளோட வீசு மெழில்காற்று
*
நேர மறியாது நிதமு முழைப்போடு
நீயு முறவாடு நிலைமை தலைகீழு
தூர நிலவோடு துயர மதுவேது
தூய மனத்தோடு தொடர்ந்து அதைகேளு
கார மிளகாயின் காந்தும் சுவையோடு
காலை உணவாகும் கஞ்சி குடித்தேனும்
வாரத் துயரோட வாழ்வை வசமாக்கு
வான முனதாக வண்ணச் சிறகாட்டு
*