எதற்கு
*********
எதற்காக வாழ்வில் இடர்தோன்று தென்றே
குதர்க்கமாய் கேட்டுனைக் கொட்டு
*
கொட்டும் வலியின் குணத்திற்குத் தக்கபதில்
பட்டுத் தெறிக்கவிட்டுப் பார்
*
பார்த்துப் பதிலிட்டப் பார்வையின் சுட்டெரிப்பைச்
சேர்த்துவைத்து ஆராய்ச்சி செய்
*
செய்கின்ற யாவும் சிறப்புறு தற்குனை
நெய்யென் றுருகுவாய் நீ
*
நீமட்டுந் துன்ப நிழல்பட்ட வன்னல்ல
பூவுக்கு முண்டு புயல்
*
புயலோடுப் போராடும் பூவாகிப் பாருன்
வயலோடும் தோன்றும் வனப்பு
*
வனப்புள வாழ்வில் வறட்சியை எண்ணி
மனத்துயர் கொள்வதை மாற்று
*
மாற்றிடு மெண்ணம் மறுமலர்ச் சிக்கொரு
ஊற்றுரு வாக்குவ துண்டு
*
உண்டென நாளும் உரக்கச்சொல் லுன்கைமேல்
செண்டுவந்து சேரும் சிரி
*
சிரிப்பதற் கேற்பச் செதுக்குனை போதும்
எரிகணை இன்னல் எதற்கு?
*