இலவசக்கல்வி தருவோம் வாருங்கள்!!!

கல்வி, ஒருவரது வாழக்கையை வடிவமைக்கும் என்பது நாம் அறிந்ததே! அந்த வடிவம், ஒரு தனி மனிதனையும்,அவன் சார்ந்த மனிதர்களையும் அடுத்ததடுத்த நிலைகளுக்கு உயர்த்துவதே அதன் நோக்கமுமாகும். ஆனால் இன்றைய இந்தியாவில் நம்முள் எத்துனை பேருக்கு கல்வி, வடிவம் தரத் தயாராக இருக்கிறது? படித்த மேதைகள் சிலரை உருவாக்கிய இதே படிப்பு , ஏழைகளின் கைகளுக்கு மட்டும் எட்டாத வண்ணமாகவே இருக்கிறது.
பிறக்கும் பொழுது கனவுகளோடு குழைந்தைகள் பிறக்கிறார்களோ இல்லையோ, அவர்களின் பெற்றோர்களின் கனவுலகில் தன் குழந்தையையே
ராஜா/ராணியாக பார்க்கிறார்கள். தன் குழந்தையை பெரிய துறைகளில் வல்லுனராக உருவாக்க வேண்டுமென்ற கனவுலகம்,அவர்கள் வளர வளர சுருங்கி வருவதையும் காண்கிறோம்.


அரசுப் பள்ளிகளில், இலவசக்கல்வி இருப்பதனாலேயே பெற்றோர்கள் தங்களது கனவு பாரத்தை 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிடம் ஒப்படைக்கிறார்கள். பள்ளிச்சீருடை, புத்தகங்கள், மதிய உணவு, மிதிவண்டி இவற்றை இலவசமாகத் தருவதனால் பள்ளிக்கல்வி, ஏழைச் சிறுவனை மாணவனாக மாற்றி பெருமிதப்படுகிறது. சற்றே சிந்திப்போம். அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பெற்றோர்கள்,பெரும்பாலானோர் அடித்தட்டு மக்களே! அவர்களின் வாழ்கையை அடுத்த நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை தங்கள் குழந்தைகளிடம் ஒப்படைக்கிறார்கள். இதனை அறிந்து தானோ என்னவோ, இந்த இலவசக்கல்வி பள்ளியோடு நிறுத்தாமல் அரசு கல்லூரிகளிலும் குறைந்த கட்டணத்தில் கல்வித் தரத் தயாராகிறது.

ஒரு அரசு கல்லூரியில் பயின்று வெளிவரும் மாணவன், தனியார் கல்லூரி மாணவனுடன் போட்டுயிடும் சமயம் வரும்பொழுது வெற்றி என்னமோ தனியார் கல்லூரி மாணவன் கையில் தான் சென்றடைகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆங்கிலம். நம்முள் பலர் இதனை மறுத்தாலும் இதுவே உண்மையாகும். ஆங்கிலத்தை எளிய முறையில் பேசிப் பழகும் பயிற்சி,ஒரு தனியார் நிறுவனத்தில் கொடுக்கும் பயிற்சிப் போல்,அரசுப் பள்ளி/கல்லூரிகளிலும் இருந்தால்,ஏழை மாணவனுக்கும் வெற்றிக்கிட்டும்.இதனால் நம் தாய்மொழியை பாதுகாப்பதோடு பிற மொழிகளினால் ஏற்படும் முட்டுக்கட்டைகளையும்
தகர்த்து எறியலாம்.

இது ஒருபுறம் இருந்தாலும், பொதுவாகவே கலைக்கல்லூரிகளை, நல்ல மதிப்பெண் எடுத்த மாணவன் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களது முதல் பார்வை பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிடமே விழுகிறது. இதற்கு முக்கிய காரணம் அனைவரும் அறிந்ததுவே! புதிதாக ஒன்றுமில்லை.மென்பொருள் நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியம் கலை/அறிவியல் துறைகளில் கிடைக்கும் ஊதியத்தை விட அதிகம். தன் குடும்பத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்ற மாணவன், வெட்டு மதிப்பெண்ணிற்குள் தன் மதிப்பெண் இல்லாத ஒரே காரணத்தினால் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பை இழக்கிறான். அவனது கனவு சிதைகிறது. பொறுப்பு இன்னும் கடினமாகிறது. ஆக ஏழை இன்னும் ஏழையாகிறான். இதுவே (எ.டு) 96 விழுக்காடு எடுத்தால் தான் அரசு கல்லூரிகளில் இடம் என்ற நிலைமை 90 விழுக்காடு என்னும்போது ஏழை மாணவரும் தன் கனவாகயிருந்த பொறியியல்/மருத்துவ படிப்பை நினைவாக்க முடியும்.

பட்டபடிப்பு படித்த ஒரு மாணவனை காட்டிலும் , சிறு வயது முதல் வேலை செய்து முன்னேறும் இளைஞன் தன் வாழ்கையில் எதிர்காணும் அனுபவங்கள் பல. இந்த அனுபவங்களுடன் கல்வியும் ஒரு தூண்போல் துணை நின்றால் அவர்களது வாழ்வு செழிக்கும்.வறுமை நீங்கும். படிக்காத மேதைகளுக்கும் படிப்பை இலவசமாக்கினால் இந்தியாவின் கல்லாமை விகிதம் குறையும் என்பதில் ஐயமில்லை. இந்திய மக்களும் உயர்நிலை அடைவார்கள்.


இந்த எழுத்து தளத்தில் தங்கள் எண்ணங்களை முன் வைக்கும் ஒவ்வொரு எழுத்தாளரும்,சமூக அக்கறைமிக்கவர்களே. ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாக நம்மாலும் கல்வி கற்பிக்க இயலும். கல்வி என்பது வெறும் புத்தககல்வி மட்டுமல்லாது,ஒரு மாணவனுக்கு ஒரு கைத்தொழிலும் கற்றுத் தரலாம். நம்முள் பலர் திங்கள் முதல் வெள்ளி வரை நேரம் தவறாது உழைப்பவர்களாக இருக்கலாம். நமக்கு தெரிந்த பணியை ஏழைகளுக்கு பயின்று அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம். உங்களில் யாரேனும் விருப்பபட்டால் குரல் கொடுங்கள். ஒன்று கூடுவோம். கல்லாமையை ஒழிப்போம்!!!

எழுதியவர் : சுமி (8-Jan-13, 12:10 am)
பார்வை : 577

மேலே