திருநங்கை

ஆண், பெண்ணுக்குரிய இரு பால் உறுப்புகளும் சேர்ந்த நிலையில் பிறப்பவர்கள், இரண்டு உறுப்போடு தோன்றி, அவை வளராத நிலையில் இருப்பவர்கள், ஒரு உறுப்புகூட இல்லாமல் பிறப்பவர்கள் இவர்கள் அனைவரும் திருந‌ர்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கைகளும் அடங்குவர்.

ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் ஆணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு, ஆணாகத்தான் பிறக்கிறார்கள். ஆண் உடலுடன் பெண்ணின் மனம், செயல், குணாதிசயம் போன்றவை அவர்களிடம் இருக்கும். அதுபோலவே பெண்ணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு, பெண்ணாக பிறந்தாலும் ஆணின் மனம், செயல், குணாதிசயம் போன்றவை உள்ளவர்களை திருநம்பிகள் என அழைக்கிறோம்.

பெற்றோர் ஆண் குழந்தைக்கு பூச்சூடி, பொட்டு வைத்து, பெண் குழந்தைபோல் உடையையும் அணிந்து வளர்த்து வந்தால் அது காலப்போக்கில் பெண்தன்மை கொண்டு திருநங்கை ஆகிவிடும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. குழந்தைப் பருவத்தில் ஆண்-பெண் என்ற பாகுபாடு இன்றி குழந்தைகள், குழந்தைகளாக மட்டும்தான் வளர்ந்து கொண்டிருப்பார்கள். அதனால் பத்து வயதுவரை பெண்தன்மை கொண்ட குழந்தைகளை அடையாளம் காண்பது பெற்றோருக்கு சிரமம்தான். பத்து வயதுக்கு மேல் பெண் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது, அழகுணர்ச்சி அதிகமாகி சிறுமிகள்போல் அழகுப்படுத்திக்கொள்வது, வண்ண வண்ண உடைகள் மீது ஈர்ப்பு கொள்வது, சிறுவர்களிடம் இருந்து விலகிக்கொண்டிருப்பது போன்றவை பெண்தன்மை கொண்ட ஆண்குழந்தைகளிடம் காணப்படும். பெண்மை குணங்கள் கொண்ட சில ஆண் குழந்தைகளுக்கு தங்களுடைய பாலினம் பற்றிய குழப்பம் இருக்காது. பெண்தன்மை இருந்தாலும் தன் பாலின அடையாளம் ஆண்தான் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

ஆனால் பெண்ணாக தன்னை அடையாளம் காணும் ஆண் குழந்தைக்கு அடுத்தடுத்த வருடங்களில் பேச்சு, நடை, உடல்மொழி போன்றவைகளிலும் பெண் தன்மை அதிகரித்துக்கொண்டிருக்கும். பதினான்கு வயது வாக்கில் ஆண், பெண் இருவருமே பருவமாற்றம் அடைகிறார்கள். பெண் வயதுக்கு வருவதும், ஆணுக்கு விந்து உற்பத்தி தொடங்குவதும் அப்போது நிகழ்கிறது.

ஒரு சிறுவன் திருநங்கையாக இருக்கும் பட்சத்தில் பருவ மாற்றத்தின் போது அவனுக்குள்ளும் சராசரியான ஆணுக்குரிய ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். உயிரணு உற்பத்தியும் தொடங்கும். அதே நேரத்தில், அதைவிட வேகமாக பெண்தன்மைக்கான குணாதிசயமும், செயல்பாடும் அவனுக்கும் வளரும். இதனால் பருவமாற்றத்தின்போது ஆண், பெண்ணை விட இவர்கள் அதிக மனக்குழப்பத்தை அடைவார்கள். இந்த மனக்குழப்ப அறிகுறியை பெற்றோர் எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிந்தால். வீட்டில் அவர்களின் பழக்க வழக்க முரண்பாடுகளை பெற்றோர் புரிந்துகொள்வது போல், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களில் சிலரும் அந்த முரண்பாட்டை கண்டறிந்து கேலி, கிண்டல் செய்யக்கூடும். சில ஆசிரியர்கள்கூட தண்டனை வழங்குவது மட்டுமின்றி `பாலியல்’ கண்ணோட்டத்தோடும் அணுகக்கூடும். இதனால் கோபம், எரிச்சல் தோன்றி, மன அழுத்தத்தின் உச்சத்திற்கு திருநங்கைகள் சென்றுவிட வாய்ப்புண்டு. பெற்றோரின் அரவணைப்பும், ஏற்றுக்கொள்ளளும் இத்தருணத்தில் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.

பெண்களை தெய்வங்களாக வழிபடும் கூட்டமும் இதுதான் அதே சமயத்தில் பெண்களை கேவலமாக நடத்தும் கூட்டமும் இதுதான். அதே போல திருநங்கையை (அர்த்தநாரீஸ்வரர்) தெய்வமாக வழிபடுவதும் இந்த கூட்டம்தான் அதே சமயத்தில் அவர்களை போக பொருளாக, கேலி பொருளாக சொல்லுவதும் இதே கூட்டம்தான்.

பாலியல் மாறுபாடு கொண்ட குழந்தைகளை பெற்ற பெற்றோர், `குடும்ப கவுரவம், கலாச்சாரம் என்ற பெயரில் உன் உணர்வுகளை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். யார் உன்னை கொச்சைப்படுத்தினாலும் சும்மா விடமாட்டோம். உனக்கு எங்கே, எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் எங்களிடம் சொல்’ என்று தன் குழந்தையை அரவணைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் பேசி யாரும் கேலி, கிண்டல் செய்யாத அளவிற்கு நன்றாகப் படிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். படித்து முடிக்கும்வரை எல்லா திருநங்கைகளுக்குமே பள்ளி, கல்லூரிகளில் பெரும் பிரச்சினையாக இருப்பது `டாய்லெட்’. மாணவர்களுக்கு உரிய டாய்லெட்டையும் பயன்படுத்த முடியாது.

மாணவிகளுக்குரிய டாய்லெட்டையும் பயன்படுத்த முடியாது. இதனால் படிப்பை திருநங்கைகள் துறக்கிறார்கள். அந்த நிலை ஏற்படாமல் இருக்க பெற்றோரே பள்ளிக்கூட நிர்வாகத்திடம் பேசி, ஆசிரியர்களின் டாய்லெட்டை பயன்படுத்த அனுமதி வாங்கித்தர வேண்டும்.

திருநங்கைகளுக்கு பள்ளிக் காலத்திலே காதல் பிரச்சினை தலைதூக்குகிறது. அதில் அவர்கள் காயமடையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் பெற்றோருக்கு இருக்கிறது. 15 வயதுகளில் ஆண், பெண்களுக்கு ஏற்படுவது போன்ற இனக்கவர்ச்சி, செக்ஸ் ஈர்ப்பு திருநங்கைகளுக்கும் ஏற்படும். காதல் கொள்வார்கள். பெரும்பாலும் அப்படிப்பட்ட காதலில் விழும்போது ஆண்களால் `உபயோகப்படுத்தப்பட்டு’, காயப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அவர்களை பெற்றோர் புரிந்துகொண்டு நல்வழிப்படுத்தாவிட்டால், தனக்கு ஆறுதல் தரும் திருநங்கைகள் சமூகத்தை நோக்கி அவர்கள் நகரத் தொடங்கிவிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதும், மும்பை போன்ற நகரங்களுக்கு செல்வதும் நிகழ்கிறது.

குடும்பத்தின் அரவணைப்பு கிடைக்காதபோது தங்கள் குடும்ப அந்தஸ்து, பணம், பொருள், ஊர், உறவு அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு அவர்கள் திருநங்கைகள் சமூகத்தோடு இணைந்துவிடுவார்கள். அங்கே அவர்கள் விரும்பியது போல் பெண் உடை அணிந்து கொண்டு, பெண் போல் வாழ வாய்ப்பு கிடைத்தாலும் வாழ்க்கைக்கு தேவையான பணத்துக்காக கடைகேட்டல் அல்லது பாலியல் தொழில் செய்வது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

திருநங்கைகள்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். அவர்கள் நிலையில் நம்மை வைத்துப்பார்த்து அவர்களையும் முழுமையாக குடும்பத்தோடு இணைத்து, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கி வாழ வழி வகை செய்து கொடுப்போம். அவர்களும் மிகச்சிறந்த ஆற்றலும், அளவு கடந்த அன்பும் கொண்டவர்கள். எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றோ, இதற்குத்தான் அவர்கள் லாயக்கானவர்கள் என்றோ முத்திரை குத்தாமல் எல்லோரையும் போல் அவர்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுப்போம்.திருநங்கைகள்களின் சமூகத்தில் இருந்தும் அறிஞர்களும், மேதைகளும், தலைவர்களும், பல்துறை நிபுணர்களும் நிறைய உருவாக வழி செய்வோம்.

திருநங்கைகள்களின் சட்டரீதியான, சமூகரீதியான, மருத்துவரீதியான பாதுகாப்பளிக்க வழிசெய்வோம்....

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (8-Jan-13, 1:38 pm)
பார்வை : 3935

மேலே