தைத்திருநாள் - 2013 - கவிதை

புதுப்பானை புத்தரிசி
தித்திக்க வெல்லமும்
கொத்து மஞ்சள் சுற்றி
செஞ்சாந்து அதில் பூசி
வாசல்தோறும் கோலமிட்டு...

மாவிலைத் தோரணத்தை
வீடெங்கும் ஆபரணமாக்கி
புத்தாடைதனை உடுத்தி
தைத்திருநாளில் உதிக்கும்
பகலவனைப் போற்றி...

அடுத்த வருடப் பொங்கலை
அரசிடம் கையேந்தாமல்
அறுத்து வந்த நெல்கதிருடன்
அறுசுவையாய் சமைத்து
ஆனந்தமாய் கொண்டாடி மகிழ...

விலையில்லாத பச்சரிசியை
உலையிலிட்டு பொங்கிடும்
நிலைமாற... நல்வளம்பெற
மிகைவிளைச்சல் கண்டிட
பருவமழையைத் தரவேண்டி...

பானைப் பொங்கல் பொங்கி
பாகுடனே கொதித்து வழிய
உற்சாகம் பீறிட்டு
'பொங்கலோ பொங்கலென்று''
உச்சரித்து வணங்குமுன்...

நினைவில் கொள்வோம் இதனை...

ஆற்று மணலை அள்ளி அள்ளி
கோட்டை வீட்டை கட்டி கட்டி
ஊற்றுநீர் சுரக்கவில்லை என
ஊர்கூடி பொங்கல் வைத்தால்
தூறல்மழையை தந்திடுமா சூரியன்...?

தடுத்திடுவோம் மணல் கொள்ளைதனை
நட்டிடுவோம் மரக்கன்றுகளை
மழை வளத்தை பெறுவோம்
மழைமிகை மாநிலம் ஆவோம்.

எழுதியவர் : ரிஷ்வன் (12-Jan-13, 12:43 pm)
சேர்த்தது : rishvan
பார்வை : 645

மேலே