கண்ணகியே !!
கட்டியவளைக் கைவிட்டு
கனிகையிடம் காமுற்ற
கயவனான உன்
கணவனை அல்லவா நீ
சபித்திருக்க வேண்டும் !!
கண் கெட்டு
காவலனை ஏன் சபித்தாய் ?
மாற்றாளின் மணாளனென்று
மயக்கமற தெரிந்த பின்னும்
மஞ்சத்தில் இடங்கொடுத்த
மாதவியின் மடமையை அல்லவா நீ
எரித்திருக்க வேண்டும் !!
மதி கெட்டு
மதுரையை ஏன் எரித்தாய் ?
தவறு செய்த இருவரையும்
தப்பிக்க விட்டு விட்டாய்,
தரங்கெட்ட அவருக்கு
தண்டனையை அல்லவா நீ
தந்திருக்க வேண்டும் !!
தாண்டவம் ஆடி
தலைநகரை ஏன் கொளுத்தினாய் ?
பாவமறியாப் பாண்டியனைப்
பரலோகம் அனுப்பி விட்டாய்,
பரிதவிக்க விட்டவருக்கு
பாடத்தை அல்லவா நீ
புகட்டியிருக்க வேண்டும் !!
புத்தி கெட்டு
புலம்பி ஏன் பொங்கினாய் ?
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைத்தான் கொளுத்த வேண்டும்
மதுரையைக் கொளுத்துவது
மடமையன்றோ மாதரசி ?

