ரகசியம்

ரகசியங்களால் ஆனது இந்த வாழ்க்கை, நானாகட்டும், யாராகட்டும், ரகசியங்களை சுமந்து கொண்டு தான் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறோம்..பெரும்பாலோர் நினைக்கிறார்கள், ரகசியம் என்பது, தான் செய்த, செய்து கொண்டிருக்கும் தவறுகளின்
மறைவிடம் என்று.... ஆனால் ரகசியம் அதுவல்ல. ரகசியம் என்பது ஒரு குறியீடு, ஒரு அமைதி, ஒரு தன்முனைப்பு, ஒரு தராசு,ஒரு தேடல், ஒரு குவியல்,ஒரு பார்வை ஒரு கவிதை, ஒரு காதலி, ஒரு பயணம்... இப்படி அது தன்னை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது... பிரபஞ்சத்தில் பால்வீதி நோக்கி பயணிக்கும் இறகொன்றின் வலிமைக்காக பிராத்திக்கும் ஒரு மனத்தில் ஒரு ரகசியம் கை கூப்பி வழிபடுவதை உணர மட்டுமே முடியும்...

தன்னை தேடி வருபவர்களுக்கு நன்மை மட்டுமே செய்யும் மனத்தில் ரகசியம் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது... ஊஞ்சல் கட்டித் தர தயாராய் வளர்ந்து தொங்கும் விழுதுகளில் ரகசியம் தன் கைகளை நீட்டிக் கொண்டிருக்கிறது.. மழை சுமக்கும் ஒரு மதிய வேளை, காணும் இடமெங்கும் தன் ரகசியங்களை பதிவு செய்வதாகவே நினைக்கத் தூண்டுகிறது ... பனி விலக்கும் பேருந்தின் முகப்பு விளக்கு, ரகசியங்களூடே பயணிப்பதாகவே நினைக்க தோன்றுகிறது...

நிலவின் ரகசியத்தை உள் வாங்கும் ஜன்னல், உள்ளே வெறித்திருக்கும் ஒரு காத்திருப்பவளை சென்றடையாமல் போவதை இரவின் ரகசியம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை..

காற்றோடு உறவாடும் ரகசியம் அலாதியானது வால் அறுந்த பட்டத்திற்கு....
மது பாட்டிலின் ரகசியங்களில் உன்னதமானது, திறக்கும் விரல்களில் படிந்து போகும் மது வாசம்....

மரம் கொண்ட ரகசியத்தின் வெளிப்பாடு, அதை வெட்டி, பயன்படுத்தப்படும் ஒவ்வொன்றிலும் ஒளிந்து கொள்ளும் சாமர்த்தியத்தை என்னவென்று எழுதுவது, இறந்தவரோடு தன்னையும் இணைத்து கொள்ளும் தன்னில் ஒரு பாதி, இறந்தவரின் ரகசியத்தையும் தன்னோடு பொத்தி பாதுகாத்து எரிந்து விடுகிறது....அறை சொல்லும் ரகசியத்தில் அந்தி மழையின் அர்த்தம் இருப்பதாக சாட்சி சொல்கிறது, அறை சுவற்று குழந்தை கிறுக்கல்....காதலும், காமமும், கோபமும், தாபமும், தன் தன் ரகசியங்களை தன்னோடு பகிர்ந்து கொண்டே இருக்கிறது.....பகிர்ந்து கொள்வது எப்படி ரகசியமாகும்.. சரி, பகிராதது எப்படி ரகசியமாகும்..... எழுதாததும் எழுத்தே என்பது போலவா என்ற கேள்வியில் எட்டி உதைக்கும் உலகப்
பந்தை ஒரு ரகசிய கைகள் மெல்ல உருட்டுவதை போலவா ....
கேள்விகளில் ரகசியங்களை உலவ விடும் பதில்களிலும் ரகசியங்கள் இருப்பதாகவே உணர்த்துகிறது, வானில் உச்சி தொட்ட பறவை தவற விட்ட சிறு கல்.......

அலையின் அறைகூவலில் ஒரு ஜோடி பாதமாவது நினைவுகளை அழுந்தும் ரகசியங்களை சுமக்கும் என்ற உண்மையோடு வந்து போவதாக கடற்கரை நினைப்பதில் உடைந்து விடுகிறதா என்ன, அதனின் ரகசியம்.....?

மாய சாவிகளின் ரகசியங்களில் மனைவிகளின் முதல் காதலன்கள் ஒளிந்து கொண்டிருப்பதை, ரகசியமாக விட்டு விடுவது தான் ரகசியத்தின் குறியீடு....கிணற்றுக்குள் விழும் ஒவ்வொரு முறையும் ஒரு ரகசியத்தை மறைத்துக் கொண்டே இருக்கிறது, நீர் இறைக்கும் வாளி ....
ஏழையின் ரகசியம் பணம் கொண்டவனிடமும், பணக்காரனின் ரகசியம் ஏழையின் தூக்கத்திலும் ஒளிந்து கிடப்பதை காண முடிகிறது...காட்சி பிழை என்ற பாரதியின் ரகசியம் எமனை காலருகே வரச் சொன்ன தைரியத்தில் வெளிப்படுகிறது...காட்சி பொருளின் ரகசியம் உள் வாங்கும் தோற்றத்தில் தலை கீழாய் தொங்கும் ஒரு குரங்கின் பரிணாம வளர்ச்சியில் இருப்பதாக நினைப்பதே மனிதனின் ரகசியமாய் இருக்கிறது...

முற்றுப்புள்ளியில் தொடர யத்தனிக்கும் அந்த கதையின் தொடர்ச்சி, எழுதுபவனின் ரகசியத்தை சுமந்தபடியே நிற்கிறது...பெண்ணின் ரகசியம் கண் மையில் கலகம் செய்கிறது.... காட்டாற்றின் ரகசியம் கூழாங்கற்களில் மினுமினுக்கிறது.. வரலாற்று ரகசியம் கை மாறி கண் மாறி தன்னை மாற்றிக் கொண்டே இருப்பதில் தன் பக்கங்களை நிறைத்துக் கொண்டே இருக்கிறது.....ஆடையின் ரகசியத்தில் நிர்வாணம் சிரிக்கிறது.... நிர்வாண ரகசியத்தில் இலைகளின் கூடாரம் பற்றி எரிகிறது...
தேசாந்திரி தேடி அலையும் ரகசியங்கள் பேருந்து பயண சீட்டிலோ, ஆள் இல்லாத பேருந்து நிலையத்திலோ, ஒரு நீளும் தனிமை சாலையிலோ, சாலையில் நிற்கும் மைல்கல்லிலோ கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்... ரகசியம் எது வேண்டுமானாலும் இருக்கட்டும் அது ரகசியமாய் வேண்டும் என்பதே ரகசிய வழிபாடு.....எவர்க்கும், தேசாந்திரிக்கும்....

வீசாமல் கையோடு கொண்டு வந்து விட்ட கல்யாண வாழ்த்தரிசியில் தேங்கி விடுகிறது, கல்யாண பெண்ணின் மீது கொண்ட கண நேர காதலின் ரகசியங்கள்.... எத்தனை மீனை கொத்திய பின்னும் தீராத ரகசியமாய் நிற்கிறது கொக்கின் கால்கள்...கடலும் கடல் எல்லையும் ரகசியத்தின் உச்சகட்டம்.... கடக்கும் காற்றிடம் மெலிதாய் புன்னகைக்கும் ரகசியங்களை கண்டும் காணாமல் கடந்து விடுகிறது ஒரு பட்டாம் பூச்சி....பேனாவின் ரகசியம் அதை ஆறாம் விரலாய் உபயோகபடுத்தும் பொழுதுகளில் புரிய முடியும்.. அடிக் கோடிட்ட வரிகளில் தேங்கி கிடக்கும் ரகசியங்களை பின் படிப்போர் உணர முடியும்....கிழிந்த பக்கங்களின் ரகசியங்கள், அனுமானத்தின் ரகசியங்களை அடுக்கிக் கொண்டே போவதை ரகசிய ஆட்சிக்குள் ஒளித்து வைக்க முற்படலாம்.....

காலத்திற்கான ரகசியங்களை நரையும் நாழிகையும் சுமப்பதை பிரதிபலிக்கும் கண்ணாடியை உடைத்திட வாய்ப்பிருந்தும், உடைத்திடாத மனங்களில் ரகசியம் ரகசியமாய் முணு முணுக்கிறது.....ஓவியத்தில் மறைத்து வைக்க ஆசைப்பட்ட ஒன்று, தூரிகையாக வெளிப்பட்ட ரகசியம் வண்ணங்களை சுமக்கிறது.... வானவில் கூட நிமிட ரகசியத்தின் வெளிப்பாடுதான்...

பறை சத்தத்தில் அடங்கி போகும் மேலாதிக்க ரகசியம்........

பிறப்பு முதல் இறப்பு வரை ரகசியங்களின் குறியீடே.....
இறப்பு தாண்டியும் தன்னை நீட்டித்துக் கொண்டே போகும் ஒன்றில் ரகசியம் நிறைந்தே காணப்படுகிறது....

ரகசியம் என்பது ரகசியம்......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (7-Mar-13, 12:38 pm)
பார்வை : 462

மேலே