ஒரு மழை நாள்
..." ஒரு மழை நாளில்...."
சோவென்று பெய்யும் மழையை,
சொகுசாக ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்...
சிலுசிலுவென்று காற்று ஊடுருவி,
சில்லென்று நாடி நரம்புகளை குளிரவைத்தது...
ஜோராக மழையில் நனைந்திடும் ஆசைக்கு,
தடாலடிக்கு பேர் போன அவள் அம்மா,
'தடா' சட்டம் போட்டு விட்டார்...
கிறீச்சென்று வாகன சத்தம் கேட்க,
விருட்டென்று திரும்பிப் பார்த்தாள்...
விடுவிடுவென்று இறங்கினான் இளைஞன் ஒருவன்.
வேகவேகமாக மழைக்கு அஞ்சி நடந்த அவன்
தொபுக்கென்று வழுக்கி விழுந்தான்..
களுக்கென்று சிரித்து விட்டாள் அவள்..
வெடுக்கென்று திரும்பியவன் அவளை முறைத்தான்.
திடுக்கிட்டது அவள் மனம்... ஐயோ...ஐயையோ..!
பரிச்சயமான முகம் சொன்னது அவளுக்கு
நிச்சயிக்கப்பட்டவன் அவன் தான் என்று...
புது மாப்பிள்ளைக்கு கொடுக்கும் வரவேற்பாயிது?
துள்ளி ஓடினாள் வீட்டின் உள்ளே..
கடகடவென்று நடந்ததைத் தாயிடம் உரைத்தாள்.
பதறிப் போய் ஓடிவந்தாள் மாமியார்...
மழைநீரில் நீந்தி வரும் மருமகனை,
பலபல வார்த்தைகளில் சமாதானப் படுத்தினாள்...
சுடச்சுட காப்பியுடன் அன்னநடை போட்டு வந்தவளின்
கண்களில் காதலையும், கன்னங்களில் செதுசெதுப்பையும்
சலிக்காது நோக்கிய அவன் தன்கோபத்தை மறந்தான்..
சிவ பூஜையில் கரடியாய் தோன்றிய மாமியாரை
ஜாடையாக பார்த்தபடி மனதைக் கவர்ந்தவளின்
வதனத்தை கண்களில் பருகினான்....