மூடு மந்திரம் 1(தொடர் கதை)
பாலைவனம், வெயில், அமைதி,வெறுமை,தனிமை, சூடு, மணல், தகிப்பு, செத்து போன காற்று , மொட்டை மரம்.
மரத்திற்கு கீழே ஏதோ ஒரு உருவம் புரண்டு கொண்டு கிடக்கிறது முனங்கியபடியே....... சற்று தூரத்தில் அவன், அந்த நால்வரையும் அடித்து துவைத்துக் கொண்டிருந்தான். வெயில் வாட்டுகிறது. வியர்வை வழிந்தோடுகிறது. விழுந்து புரண்டு எழுகையில் மணல் ஒட்டிக் கொண்ட உடம்பு, பிசு பிசுப்பில் நறுநறுவென்கிறது.....இவர்களின் சத்தம் வெறுமையை கிழிக்கிறது....கிழிந்த ஓசோன் படலம் தாண்டி வந்து குத்தும் கதிவீசுகள் போல். அலறல் சத்தமும் அடி சத்தமும் சூட்டோடு சூடாய், காற்றோடு கலந்து உயிர் கொடுக்கிறது செத்துப் போன காற்றிற்கு ....இங்கே நடக்கும் சண்டையில் அங்கே நிற்கும் மொட்டை மரம் நடுங்குகிறது......பூஜ் நகர பூகம்பம் போல... சர்ப்பமாய் அந்த உருவம் அனத்துகிறது......
காட்சி மாற ஆரம்பித்தது. விடியும் நேரக் கனவுகள் போல் சட்டென நால்வரும் வியூகம் வகுத்து அவனை அடிக்க ஆரம்பித்தார்கள். முகம் கிழிந்து தொங்க குருதி வழிந்தது, கூட வியர்வையும்......எதிர் பாராத குத்துக்கள் சித்தம் கலங்க வைக்க, எதிர் பார்த்த குத்துக்கள் மொத்தம் கலங்க வைத்தன...கை, கால், முகம், தலை, இடுப்பு, இதயம் என அங்குலம் அங்குலமாக அடி விழுந்து கொண்டே இருந்தது.... இனி இவனால் எழவே முடியாது என்று முடிவுக்கு வந்த பின், நால்வரும் கத்தினார்கள்....
போ.... அங்க போ.... போடா நாயே.... நாய் மாதிரியே போ.....
வீங்கிய கண்களில் விபரிதமாக பார்த்தான்.... மங்கலாக தெரிந்தார்கள்... போ... போய் பொழச்சுக்கோ.. என்றபடியே கொக்கரித்து சிரித்தார்கள்.. அவன் நடுங்கியபடியே மணலில் சூடாய் தவழ்ந்தான்... வெறி கொண்ட சர்ப்பமென, பசி கொண்ட அற்பமென அந்த மொட்டை மரத்தை நோக்கி ஊர்ந்தான்..... எரிந்து எரிந்து மரத்துப் போன உடலுடன் வெயிலின் துணையோடு, பிடிக்க பிடிக்க, உருவி போகும் மணலோடு மரத்தினடியில் புரண்டு கொண்டு கிடந்த நிர்வாண உருவத்தை நோக்கி ஊர்ந்தான்..... அந்த நால்வரும் சிரித்துக் கொண்டே மணல் வழியாக நடந்து, மணலோடு கரைந்து காணாமலே காணாமலே போனார்கள்.....பாலைவனத்தில் சூறைக் காற்று இப்போது பறை கொட்டியது... மணல் ஆடும் ஆட்டத்தில் பேய்கள் சொன்னது ஜாதிகள்.... சுழல்காற்று புதுவித சத்தங்களை இசையாக்கிக் கொண்டு அந்த இடத்தையே அலறடித்தது.....
அவன், நெருங்கி விட்டான்.... நெருங்கியே விட்டான்... நெருஞ்சி முள்ளாய்..... ஒரு முள்ளம் பன்றியாய் அந்த நிர்வாண உருவத்தின் மேல் படர்ந்தான்....மிருகத்தின் உச்சகட்ட கேள்விக்குறி.... அந்த நிர்வாண உடல் ஒரு அரவாணிக்கானது என்பதை இப்போது நன்கு உணர்கிறான்.... அரவாணி உணர்விழக்கும் வரை பேய் மழையாய் அறைகிறான் .... பேரிரைச்சலாய் கேட்கிறது மாய அலைகள்....
இந் நேரம் செத்திருக்க வேண்டும் அந்த அரவாணி..... சரி தான்.... கோபம் கொண்ட சிங்கத்தின் வாயில் அகப்பட்ட மானின் கழுத்து..... வழிந்த ரத்தத்தை துடைக்க மறந்து எழுகிறான்.... குதறப்பட்ட அரவாணி துடிப்பின்றி கிடக்க, குதறிய அவன் அரவாணியின் கழுத்துப் பகுதி சதையை கவ்வியபடியே எழுகிறான்.....
காற்று பலமாய் வீசுகிறது ... அந்த மொட்டை மரம் சாய்கிறது..... சிரித்துக் கொண்டே அழுகிறான் பலமாக பாவமாக......
' மூடு மந்திரம்'............................ தொடரும்......

