மறக்கச் சொன்னால் மனதுக்குப் புரியவில்லை...
இல்லையென்று சொல்லிவிட்டாள்,
இரவுகள் இனி கழிவதெப்படி,
இவளை மறந்து போ மனமே என்றேன்,
மனதால் அவளை மறக்க துணிந்தேன்..
ஆனால்,
அழகியப் பெண்ணைக்
காணும் போதும்,
ஆசை முத்தம்
அவிழும் போதும்,
செந்தமிழ் நடையைப்
பயிலும் போதும்,
எந்தமிழ் மொழியை
ரசிக்கும் போதும்,
தென்றல் காதில்
பேசும் போதும்,
அது, தீண்டல் என்னைச்
செய்யும் போதும்,
நிசப்தம் நிலையாய்
பேசும் தருணம்
நினைவுகள் நெஞ்சை
வாட்டும் போதும்,
இதழ்களில் ஈரம்
வறண்ட போதும்,
இலைகளில் துளிகள்
உதிர்ந்த போதும்,
இரவுகளை நாடா
இமைகளின் மீதும்
இமைகள் மூடா
இரவுகளின் போதும்,
தனிமையின் நினைவுகள்
உன்னை சேரும்
அந்தத் தவிப்புகள் இங்கே
தொடரும் போதும்,
கனவுகள் தினம்
காணும் போதும்,
காலங்கள் ஒவ்வொன்றாய்
மாறும் போதும்,
சிதறும் அருவியைப்
பார்க்கும் போதும்,
உதறும் குளிரில்
நடுங்கும் போதும்,
மழையின் துளிகள்
மண்ணைச் சேரும்
மண்வாசம் தந்து
மணக்கும் போதும்,
கூவும் குயிலைக்
கேட்கும் போதும்,
குடையாய் வானம்
மாறும் போதும்,
பாடல் வரியை
ரசித்த போதும்,
பிறரை மறக்க
நினைக்கும் போதும்,
விழிகளில் ஈரம்
பிறழும் போதும்,
விடியல் தினமும்
பிறக்கும் போதும்,
கவிதை வடிக்க
அமரும் போதும்,
கண்ணீர் வடித்து
முடித்த போதும்,
வண்ணம் கொண்ட
மயிலின் ரோமம்
வானம் பார்த்து
சிலிர்க்கும் போதும்,
எண்ணம் எங்கோ
செல்லும் நேரம்
ஏக்கம் எந்தன்
கண்ணை மூடும்,
இதழைக் கண்ட
இமையின் மோகம்
இம்மையும் சற்று
குறையா போதும்,
என்னவளே,
உன் நினைவு
என்றுமென்னை விரட்டிடுதே..!!!