என் நீண்டதொரு பயணம் உன்னோடு.....

என்னை சுற்றி ஒரு வட்டமிட்டு
அதற்குள் சந்தோஷ செடிகளை
மட்டுமே நட்டு வைத்து
முட்கள் இருந்தும் அதை அலட்சியமாய்
தாண்டி குதித்து... ஒற்றைக்கால்
நடனமிட்டு கொண்டிருந்தவள் நான்...

நமக்குள்ளான அறிமுகம்
நடந்தே ஆகவேண்டுமென
விதியும் நினைத்து விட்டதால்
எதிரும் புதிருமான ஒரு சந்திப்பில்
வார்த்தைகளால் உரசிக் கொண்டோம்...

உரசிய வேளையிலே
உள்ளம் ஒட்டிக்கொண்டதை அறியாமலே
ஒருவருக்கொருவர் முறைத்தும் கொண்டோம்...

மீண்டும் மீண்டும் நமக்குள்ளான
சதுரங்க விளையாட்டுகளிலே
காதல் துளிர்த்துக்கொண்டு
நம் சீண்டல்களை சிறு குழந்தை போல்
கன்னம் தாங்கி ரசித்துக் கொண்டிருந்தது...

நாமும் ஆழ்மனதுள் நம்மை
நேசித்துக் கொண்டும்,
விளையாட்டாய் வெளியிலே
மோதிக்கொண்டும்,
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்
ஆடிக் கொண்டிருந்தோம்...

எத்தனை நாட்களுக்கு தான்
முகமூடி கழராமல்
அட்டை கத்திக்கொண்டு
நம் வாள் வீச்சுக்களை
அலுக்காமல் வீசிக் கொண்டிருப்பது?

வேடம் கலைந்து நம்
நேசத்துள் நம்மை
புதைத்துக் கொண்ட தருணம்
வானில் வால் நட்சத்திரம் பூத்து
புன்னகையுடன் வாழ்த்திவிட்டு சென்றது...

உன்னால் நான் தாயாய் மாறுகிறேன்,
சேயாய் சிணுங்குகிறேன்,
தோழியாய் ஒரு அக்கறை,
காதலியாய் செல்ல கோபமென
எனக்குள்ளே என்னை
பல முகங்கள் பூட்டி உலவ விட்டு
வேடிக்கை பார்க்கும் உன்னை
ஆன்மாவின் ஆழத்துள் நட்டு வைத்தேன்...

எனக்கான வட்டப்பாதை விலக்கி
உனக்காக நீ அமைத்த பயணத்தில்
உயிரோடு உயிர் கட்டி
என்னையும் உன்னோடு
இணைத்துக்கொண்டாய்...

நானும் பிணைத்துக் கொண்ட
விரல்களை துடுப்பாக்கி,
கட்டுமர பயணம் போலே உன்னை
கட்டிக்கொண்டு, வேகமாய்
தாலாட்டும் அலைகளுக்கிடையே
பயமறியாத ஒரு மிரட்சி கலவையோடு
பயணித்துக் கொண்டே இருக்கிறேன்...

கரையொன்றை கண்டுகொள்ள விரும்பாத
நீண்ட பயணமாய் அது-
தொடர்ந்து கொண்டே இருக்கும்
நம் ஆயுளையும் தாண்டி.....

எழுதியவர் : ஜி.டி (30-Jun-13, 9:50 am)
பார்வை : 181

மேலே