மகாத்மாவுக்கு ஒரு பதில் (டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்)- பகுதி-4
மகாத்மாவுக்கு ஒரு பதில்.
**************************************
டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்.
ஒரு பார்ப்பனன் தன வாழ்நாள் முழுவதும் பார்ப்பனனாக இருப்பதே சிறப்பு என்று மகாத்மா கருதுகிறார், நிறைய பார்பனர்கள் அப்படியொன்றும் தம் வாழ்நாள் முழுவதும் பார்பனர்களாகவே நீடிக்க விரும்புவதில்லை, இது ஒருபுறம் இருக்க தம் பரம்பரைத் தொழிலான புரோகிதத்தில் இன்னமும் ஒட்டிகொண்டிருக்கும் பார்பனர்களை பற்றி என்ன சொல்ல-?
அவர்கள் ஏன் இன்னமும் அதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் - பரம்பரைத் தொழிலே உத்தமம் என்ற கோட்பாட்டின் மீதுள்ள நம்பிக்கையிலா அல்லது கீழ்க்த்தரமான வழியிலேனும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலா-?
இத்தகைய கேள்விகளை மகாத்மா கேட்டுகொள்வதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக தமக்கு மனமுவந்து அளிக்கப்படும் தானத்தில் வாழ்ந்துகொண்டு தம்மிடமுள்ள ஆன்மீக செல்வத்தை மனமுவந்து வழங்குகிறவர்களே உண்மையான பார்பனர்கள் என்று கூறுவதுடன் திருப்தி அடைந்துவிடுகிறார்.
இப்படித்தான் ஒரு பிறவிப் பார்ப்பனப் புரோகிதன் மகாத்மாவின் கண்களுக்கு ஆன்மீக செல்வத்தைப் பெற்றிருப்பவனாகத் தோன்றுகிறான்.
வைதீகப் பார்பனனை பற்றி இன்னொரு படபிடிப்பையும் கவனிப்போம், பார்பான், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் பூசாரி, அழிக்கும் சிவனுக்கும் பூசாரி, அன்பின் தத்துவத்தை மனித குலத்துக்கு போதித்த மாபெரும் ஆசானாகிய கயைப் புத்தருக்கும் பார்பனன் பூசாரியாக இருக்க முடிகிறது, சத்திய கடவுளான ராமனுக்கும் அவன் பூசாரி, சத்திரியரை ஒழித்துக் கட்ட என்றே அவதாரம் எடுத்த பரசுராமனுக்கும் பூசாரி, படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும் பார்பனன் பூசாரியாக முடியும்,
ஆன்மீக உலகில் பிரமனின் ஆதிகத்தை ஏற்காத அல்லாவைத் தொழும் பிறர்களுக்கும் பார்பனன் பூசாரியாக முடியும், நிஜ வாழ்க்கையில் இப்படி இல்லை என்று யாரும் கூற முடியாது, மாறாக இது உண்மைதான் என்றால் ஒரு நேர்மையான மனிதன் எதிரெதிரான குணங்களைக் கொண்ட எல்லா தேவ தேவிகளுக்கும் பக்தனாக இருக்க முடியாது என்னும்போது அப்படி இருக்கிற பார்பனனின் இந்தத் திறமையை பற்றி என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை, இந்த அசாதாரணமான நிகழ்வையே இந்துக்கள் தம் மதத்தின் மாபெரும் சிறப்பாக, அதன் சகிப்புத்தன்மை - பரந்த நோக்கு என்பதாகக் கூறுகிறார்கள்.
இப்படி எளிமையாகச் சொல்லப்பட்டாலும் இந்த சகிப்புத் தன்மையும் பரந்த மனப்பாங்கும் உண்மையில் அசிரத்தையையும் கட்டுப்பாட்டினையும் குறிக்கிறது, மேலோட்டமாகப் பார்த்தால் இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பது கடினம்.
ஆனால், உள்ளடக்கத்தில் அவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறு ஆனவையாகும், நெருங்கி ஆராய்ந்து பார்த்தால் இது விளங்கும், வெவ்வேறு விதமான கடவுள்களையும் வழிபடுவது சமரசத்தன்மையைக் குறிக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளலாம், ஆனால் அதுவே சந்தர்பத்திற்கு ஏற்றவாறு நிலைபாட்டை மாற்றிக்கொள்ளும் நேர்மையின்மையையும் குறிக்க முடியும் அல்லவா-?
இந்த சகிப்புத்தன்மை என்பது உண்மையில் நேர்மை இன்மையே என்பது உறுதி, இது உறுதியானால் தன் காரியத்தை முடித்துகொடுக்கும் எந்த சாமிக்கும் பூசாரி ஆவதற்கு தயாராக இருக்கும் ஒருவனிடம் என்ன ஆன்மீக சம்பத்து இருக்க முடியும் என்று நான் கேட்கிறேன்.
அப்படிப்பட்டவனிடம் எந்தவிதமான ஆன்மீகச் செல்வமும் சுத்தமாக இருக்காது என்பதோடு அத்தகையவன் நம்பிக்கையோ விசுவாசமோ இல்லாமல் பரம்பரையாக எந்திரத்தனமாக பெற்றதற்காக மட்டுமே புரோகிதம் என்ற உயர்ந்த தொழிலை கைகொள்வான் என்றால் அது நல்லவனுக்கு அடையாளமும் இல்லை, அதற்கு பதிலாக சமயப் பணி என்ற உன்னதத் தொழிலை விபசாரமாக்குகிறான் என்றே கூறவேண்டும்.
ஒவ்வொருவரும் தம் பரம்பரைத் தொழிலையே ஏற்க வேண்டுமென்ற கொள்கையை மகாத்மா ஏன் பிடித்துத் தொங்குகிறார்-? இதற்கான காரணத்தை அவர் எங்கும் சொல்லக்காணுமே, இதைச் சொல்வதற்கு அவர் அக்கறை எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அப்படி காரணம் இருக்கத்தான் வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் ''யங் இந்தியாவில்'' ''சாதியா வர்க்கமா'' என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதினர், அதில் அவர் ''வர்க்க அமைப்பைவிட சாதி அமைப்பே சிறந்தது, ஏனென்றால் சமூகத்தின் நிலைப்புத் தன்மையை பாதுகாக்க சாதியே மிகச் சிறந்த வழி'' என்று வாதிட்டார்.
ஒவ்வொருவரும் அவரவர் பரம்பரைத் தொழிலையே செய்யவேண்டும் என்ற கொள்கையை மகாத்மா ஆதரிக்க காரணம் இதுதானா-? அப்படியானால் சமூக வாழ்வைப் பொறுத்து ஒரு தவறான கண்ணோட்டத்தை அவர் ஆதரிக்கிரதாகவே ஆகும்.
சமூகம் நீடித்திருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள், அதற்காக தனி மனிதர்களுக்கிடையிலும் வர்க்கங்களுக்கு இடையிளுமான உறவில் கொஞ்சம் அனுசரித்துதான் போகிறார்கள், ஆனால் இரண்டு நிலைமைகளை யாருமே விரும்புவதில்லை என்று உறுதியாகக் கூறலாம்.
1. எதிர்காலத்திலும் மாற்றமுடியாதபடி இறுகிப்போன உறவை யாரும் விரும்புவதில்லை, நிலைப்புத் தன்மை தேவைதான், ஆனால் மாற்றம் அவசியமாகிறபோது கூட அதை மறுக்கிற நிலைப்புத்தன்மை தேவையா-?
2. தொடர்ந்து அனுசரித்துகொண்டே போவதை யாரும் விரும்புவதில்லை, அனுசரனைக்காகவே (Adjust - ment ) சமூக நீதியை இழந்துபோவதையும் யாரும் விரும்புவதில்லை, சாதி அடிப்படையில் அதாவது பரம்பரைத் தொழில் அடிப்படையில் சமூக உறவு அனுசரிக்கப்படுவது மேற்சொன்ன இரண்டு தீமைகளையும் தவிர்த்துவிடுகிறதா-? இல்லவே இல்லை,.
சாத்தியம் மிகச்சிறந்த அனுசரணையாக இருக்கிறதற்கு பதிலாக மிக மோசமான அனுசரணையாகவே இருக்கிறது, ஏனென்றால் சமூக அனுசரணையின் இரண்டு விதிகளான நெகிழ்ச்சித் தன்மைக்கும் நடுநிலைத் தன்மைக்கும் அது எதிரானது.
********************* தொடரும்.
எழுதியவர் - புரட்ச்சியாளர் டாக்டர் B .R அம்பேத்கார் ''அரிஜன்'' இதழ் - 15-08-1936
நன்றி;-
நூல் - சாதி ஒழிப்பு.
பக்கம்- 160,161,162,163.
வெளியீடு - அலைகள் பதிப்பகம், 1998
மொழியாக்கம் - வெ. கோவிந்தசாமி.