மரண நொடி
![](https://eluthu.com/images/loading.gif)
கோடை சூரியனின் ஆட்சி.
தனிப்பயணம்.
பாரம் என் தலை சாய்க்க ,
காலில் குத்திற்று முள்.
வலி மட்டும், என் வழித்துணையாய்..
நா வறண்டு, நிலத்தில் ஊன்றி, நீர் தேடிற்று.
முகத்தில் துப்பி, முகம் மறுத்து மயிர் பிடித்தான் .
கண்ணீரும் எச்சிலும் கன்னத்தில் உருண்டோட,
உள் வழிந்தது, அவமானமும் துக்கமும்.
குண்டுகளுக்கிடையில் அவர்கள் குரல் கேட்கவில்லை.
குண்டுகள் தீர்ந்தபின் அவர்கள் இருக்கவில்லை
சொல்லநினைத்தேன் முடியவில்லை,
வான் எங்கும் குருதிப் புகை,
நெருங்கிவந்தது நிலவு என் பக்கம்.
பின் நகர்ந்தது பூமி.
என்னைப்பேசச்சொன்னீர்கள் பேசினேன்.
என்னைநிர்வாணமாக்கி கைகளைப்பின்புறம்
கட்டவும் கூட பேசிக்கொண்டேயிருந்தேன் கடைசிவரை!
இறுதி அஞ்சலி ஊர்வலமோ என் கண்ணில்.
என்னைத்தேர்ந்தெடுத்தார்கள்.
அவர்கள் செய்யும் பாவங்ளைச்சுமப்பது என் பணி.
சுமந்துகொண்டிருந்தேன்.
பாவங்கள் சுமந்த பாவத்திற்காக தண்டிக்கப்படும்வரை.
என் மூளைக்குள் முண்டியடிக்கும்,
என் அன்பிற்குரியவள்.
தென்றல் தீண்ட துடிக்கும் அவள்,
கடும் புயல் கடல் வெளியில் இன்று.
தோய்ந்து போயிற்று என் சுயம்.
மூழ்கிச்சாகும் கரையில் நின்றிருந்தேன்,
என் ஒற்றை மூச்சில் நம்பிக்கை மட்டும்.
என்னவளோ விடியல் நோக்கி வடக்கே,
போகட்டும்.
என் தமிழ் தேசம் தாங்கிகொள்ளும்,
என் தேவதையை.
வார்த்தைகள் உதட்டோரம் குருதியோடு,
வழிந்துவிட்டன சிவப்பாய்...
- நெல்சன்