நீள் கடலும் மலையும்

பறவை கூட்டம், பட்சி சத்தம், பச்சை பசேலென வயல்வெளி, கால்நடைகள், மேல்சட்டையில்லாத விவசாய பெருமக்கள், நகர நாற்றமில்லாத கிராமிய மணம் வீசும் அழகிய ஊர் தென்கரை.

மதுரையிலுள்ள நீர் நிலைகளின் இன்றைய நிலை குறித்த அறிய புறபட்டோம். அதன் முதல் கட்டமாக சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கண்மாய்க்கு நண்பர்களுடன் ஒரு சிறு குழுவாக கடந்த 01.09.2013 அன்று மாலை சென்று இருந்தோம்.

தென்கரை கண்மாய் கரையை எட்டியதும் கட்டுவீறியான் பாம்பு எங்களை வரவேற்று முள்புதருக்குள் ஊர்ந்தொடியது. நாய்குட்டிகள் நாலைந்து தாயை தேடியலைந்து திரிந்தன.

தென்கரை கிராமத்தை சுற்றியுள்ள பல கிராமங்கள் குடிநீருக்கும், பாசனநீருக்கும் 584 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்கரை கண்மாயின் தண்ணீரை நம்பித்தான் வாழுகின்றன. நெல்,வாழை, வெற்றிலை கொடிக்கால் போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ளன.

கண்மாய் கரை மீது ஏறி நடக்கிறோம்..... அப்பப்பா இயற்கையின் கொடை இதோ உங்கள் கவனத்திற்கு.....

புலி வண்ண பட்டாம்பூச்சி, வெட்டுக்கிளி, சில்வண்டு போன்ற பூச்சியினங்களும்

இரட்டைவால் குருவி, நீலவால் பஞ்சுருட்டன், வெளிர்சாம்பல் கதிர் குருவி, கருவெள்ளை புதர் சிட்டு, கள்ளி புற, குயில், தூக்னாங்குருவி, காகம், மைனா, பச்சை கிளி, ஊதா தேன்சிட்டு, ஊதா பிட்ட தேன்சிட்டு, கருஞ்சிட்டு போன்ற காட்டுயிர் பறவைகளும்,

முக்குளிப்பான், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சின்ன வெண்கொக்கு, நீளவால் இலை கோழி, தாமரை இலை கோழி, நாமக்கோழி, வெண்மார்பு கோழி போன்ற நீர்நிலை பறவைகளும் தென்கரை கண்மாய் மடியில் தவழ்ந்தும், பறந்தும் திரிந்தன.

(இவ்வளவு பறவைகளையும் நான் அறிந்து கொண்டதும் பெயர் தெரிந்து கொண்டதும் அங்கிருந்த சில மணி நேரத்தில்தான். அதில் அனுவபம் கொண்ட நல்ல தோழர்கள் நம்மோடு இருக்கிறார்கள்)

சுதந்திரத்தை, சுவாச காற்றை, நீர்நிலபரப்பை, வான்வெளியை, வாழ்க்கையை நாம் இவ்வுயிர்களோடுதான் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒரு காக்கைக்கும் என் வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்....

நாம் அடித்து கொன்று வீதியில் எரியும் எலிகளை காக்கை வந்துதான் கொத்தி போகிறது. காக்கைகள் இல்லாவிட்டால் நம் வீதியெங்கும் நாற்றம் வீசி, நோய் பரவும். சுற்றுபுறத்தை சுத்தம் செய்கிற சமூகநல பணியை காக்கையும் மேற்கொள்கிறது. இவ்வாறாக ஒவ்வொரு உயிரும் இந்த மண்ணில் உயர்ந்ததுதான்.

சொகுசு மகிழுந்து ஒன்றை கண்டால் அது எந்த நிறுவனம், என்ன தொழில்நுட்பம் என அலசி அடையாளபடுத்த பழகிவிட்டோம்

மின் கம்பியில், மரக்கிளையில் புதர்களில் வந்து அமரும் ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு இனம். அதற்கென தனித்தனி குணாதிசியம் உண்டு. ஆனால் நாம் அவை எல்லாவற்றுக்குமாக பொதுவாக பறவை என்று பெயர் சூட்டி கடந்து போகிறோம்.

மதுரையில் உள்ள மற்ற கண்மாய்களை போலவே தென்கரை கண்மாயும் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி துளி துளியாக அழிந்து வருகிறது...

நம் குடிநீர், நம் நிலத்தடி நீர் பாதுகாக்கபட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே கண்மாய்களை தூர்வார வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுவது சுயநலம்.

ஒரு கண்மாயை இத்தனை உயிரினங்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றன. கண்மாய் நமக்கானது மட்டுமல்ல. எனவே ஒரு கண்மாயை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்கிற முயற்சி இவ்வுயிர்களின் நலனில் இருந்தே அமைய வேண்டும்.

"காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

தான் உணர்ந்து நாம் உணர பாடியிருக்கான் என் அப்பன் பாரதி....

நீர்நிலைகள் குறித்து களம் நின்று அறிவதே மதுரையிலுள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும்
முயற்சியின் முதல் இலக்கு, முதல் படி...

விருப்பமுள்ளவர்கள் எங்களோடு இணையலாம் அல்லது உங்களோடு எங்களை இணைத்து கொள்ளலாம்.. தொடர்புக்கு +91- 8608266088.

அடுத்த கண்மாயை நோக்கிய நம் பயணம் தொடரும்.....

அன்புடன்
தமிழ்தாசன் (05.09.2013)

எழுதியவர் : தமிழ்தாசன் (5-Sep-13, 6:53 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 180

சிறந்த கட்டுரைகள்

மேலே