இல்லத்தரசிகள் நாங்கள் ..
நாள் ஒவ்வொன்றும்
விடியும் போதும்
ஓயாத வேலையுடன்
உற்சாகமாய் பவனி வரும்
ஒப்பீடு செய்ய முடியாத
உன்னத பொக்கிஷம்
நாங்கள் ........
ஞாயிற்றுக் கிழமை
எல்லோருக்கும் விடுப்பு ...
அன்று தான்
எங்களுக்கு அதிகமாய்
காத்திருக்கும் பொறுப்பு ..
எப்போதுமே
எங்களுக்கும் சூரியனுக்கும்
கடும் போட்டி
யார் முதலில் எழுவது என்று
ஜெயிப்பது என்னவோ
பெரும்பாலும் நாங்கள் தான் !
அழகான உலகம்
பெண்ணை உருவாகியது
இதற்கு தானோ ?என
ஏங்க வைக்கும் எங்கள் பொறுமை !
இப்படியும்
இருக்க முடியுமா ?என
ஆச்சரியப்பட வைக்கும்
எங்கள் பெண்மை !
புத்தாடை உடுத்தாமல்
புது பொலிவு க் கூட்டாமல்
பூ வகைகளைக் கூட சூடாமல்
நாங்கள் கொண்டாடுவோம் பண்டிகைகளை
இல்லத்தாரின்
மகிழ்ச்சியினை மட்டுமே
மனதில் கொண்டு ......
அடுப்படியிலிருந்து அண்டம் வரை
அனைத்தையும்
அறிந்து வைத்திருக்கும் நாங்கள்
சே ....என்னம்மா
இதுகூட தெரியலையா ....
என கேட்கும்
எங்கள் பிள்ளைகளிடம்
தோற்றுப் போகத்தான் துடிக்கிறோம் ....
"கற்றது கை மண் அளவு"
என்கிற
உண்மையை
அடிக்கடி உணர்வோம்
எங்கள் குழந்தைகளுக்கு
பாடம் கற்றுக்கொடுக்கும் போது ...!
அதிக கோபம்
அதிக சந்தோஷம்
எங்கள் அகராதியில் இருந்து நீக்கப்பட்ட
வார்த்தைகள் .....
திட்டு ,பாராட்டு
இரண்டையும் சமமாய் பார்க்கும்
தராசு எந்திரம் நாங்கள் .....
நாங்களும் பூமியும்
ஒன்று ...
ஒரு நொடி ஒய்வு எடுத்தாலும்
அஸ்தமித்து போகும் உலகம் !
முதுகிலிருந்து முழங்கால் வரை
முடியாமல் வலித்தாலும்
ஐயோ ...அவரு பாவம்
என
பலவகைகளைசாப்பிட செய்ய சொல்லி
மூளைக்கு மனு கொடுக்கும்
மனைவி மார்கள் நாங்கள் ...............
கடும் வெயிலிலும் ,மழையிலும்
பனியிலும் கால் கடுக்க
நின்றாலும்
குழந்தையின் குதூகலத்தை
பார்த்து வலி மறக்கும்
அன்பான அம்மாக்கள் நாங்கள் ............
கேலியோ ,சிரிப்போ
இன்பமோ ,துன்பமோ
சண்டையோ ,சமாதானமோ
எதுவாகினும்
பேச்சு வார்த்தையில் முடித்துக்கொண்டு
கண்டும் .காணாமலும்
கேட்டும் ,கேட்காமலும் ..
சூழ்நிலையை அறிந்து
சுகுகமாக போகும் இக்கால
மருமகள்கள் நாங்கள் ..............
நாங்கள்
சிக்கன சிற்பி ...
எங்கள் சங்கத்தின்
கொள்கை ஒன்றே ஒன்று தான்
அது
சிக்கனம் +சேமிப்பு =செல்வம் !
கணினியின் அறிவை விட
வனிதையர் எங்களின் அறிவு
அசாத்தியமானது .....
நினைவு பதிவுகளை பாதுகாப்பதில்.....!
குடும்பம் என்கிற கோவிலில்
சாமியும் நாங்கள் தான்
பூசாரியும் நாங்கள் தான் ........
மூளையை சலவை செய்யும்
மதிவாதிகளும் நாங்கள் தான்
மூட நம்பிக்கையில் அடிக்கடி
மூழ்கும் மதவாதிகளும்
நாங்கள்தான் ..........
உறவுகளை ஓட்ட வைக்கும்
பசை ஒட்டியும் நாங்கள் தான்
தேவையற்றதை வெட்டி எடுக்கும்
கத்திரியும் நாங்கள் தான் ....
இல்லத்தை நிர்வகிக்கும்
இல்லத்தரசியும் நாங்கள் தான்
இதயத்தை வசமாக்கும்
இம்சை அரசியும் நாங்கள் தான் ........
நாலு பேர் செய்யும்
வேலையை
ஒரு ஆள் நாங்கள் செய்வோம் ....
நம்பிக்கையை காப்பாற்ற
நூறு மடங்காய் உழைப்போம் ...........!
எங்கள் உழைப்பிற்கான
சன்மானம்
எங்கள் குழந்தைகளின் வெற்றி......!
எங்கள் உழைப்பிற்கான
சன்மானம்
எங்கள் கணவன் மார்களின் நிம்மதி ....!
எங்கள் உழைப்பிற்கான
சன்மானம்
எங்கள் குடும்பத்தின் பெருமை ....
உண்மையில்
எங்கள் உழைப்பிற்கான
சன்மானம்
இந்த தேசத்தின் ஒட்டு மொத்த
வளர்ச்சி ..................!