கண்ணாடியின் காதல்…

எதிரில் அவள்
அவள் விழிகளில் நான்.
நான்
மெச்சிக்கொண்டேன்
என் அழகை!

அவள்
என்னை பார்த்துகொண்டிருக்கும்
நிமிடங்களில் உருகினேன்
நான் எனக்குள்ளேயே !

நாங்கள்
சந்தித்திராத நாள் என்று -ஒன்று
எப்போதும் இருந்ததில்லை.

ஓர்நாள்,
ஏதோ அவசரம்
அம்மாவிடம் தலை வாரிக்கொண்டாள்.
இருந்தும்
என்னை பார்க்க வந்தாள்!
சின்னதாய் ஒரு பொட்டு வைத்து
அதற்கு சந்தனத்தில்
அழகாய் மகுடம் சூட்ட.
அழகான அவள் நெற்றியை
அவள் அழகுபடுத்தும் காட்சியை காண
எனக்கு மட்டுமே கொடுத்து வைத்திருந்தது ....

மாலையில் அவள்
களைப்போடு வந்து நின்றாள்.
அவள் நெற்றியின் ஓரத்தில் புருவத்தை ஒட்டி
ஒரு வியர்வை துளி
அவள் கன்னத்தை முத்தமிடும் முயற்சியில் இருந்தது ...

அந்த வியர்வை துளியை
நூறு துண்டுகளாக்கிவிட துடித்தேன்.
என் கோவத்தை உணர்ந்தோ என்னவோ
அவளாகவே அதற்கு ஒரு முடிவு கட்டினாள்.

தினமும் நான்
அவள் முகத்தில் விழித்தேன்.
இல்லை! இல்லை!
அவள் என்னை பார்த்து கண் விழித்தாள்.

அவள் ரகசியங்களை
என்னிடம் பகிர்ந்துகொண்டாள்.
என் மனதின் ரகசியமாய் அவள் இருந்தாள்!

அழகாய்!
நகர்ந்தது
நாட்கள்.

தீடீரென்று ஓர்நாள்,
புதுமுகங்கள் வீட்டில் .
அலங்காரத்தில் அவள்
அழகாய்!
குழப்பதில் நான்!
அன்று மாலை
அவளை காணவில்லை!

அன்று தொடங்கி ஓரிரு நாட்களாய்
மாலை நேரங்களில்
அறை விளக்கும் எரிவதில்லை.
சோகத்தில் நான்
இருண்ட அறையில்
வெளிச்சம் வந்தது
ஆஹா !
அவள் தானா ?
இல்லை.
அவள் அன்னையும் அண்ணனும்.

அவள் எங்கே ?
என்று,
அவர்களிடம் கேட்கும் தைரியம்
எனக்கு இல்லாமல் போனது.
நாட்கள்
நகர்ந்தது
மெதுவாய்!

மீண்டும் புதுமுகங்கள்!
அவளும் வந்திருந்தாள் ...
இளவரசியாய் சென்றவள்
ராணியாய் வந்து நின்றாள் ...
அதிர்ச்சியில் உறைந்தது
அறையில் இருந்த விளக்கும் கூட ...

என்னை கையில் ஏந்திக்கொண்டு
வெளியே நகர்ந்தாள்
வெளிச்சம் தேடி ....
நழுவிக்கொண்டேன் நான்
அந்த இருளிலேயே ...

உடைந்து விட்டதாய்
என்னை வெளியே எறிந்தாள் ....
உண்மையில்
உடைந்து போனேன்!
அவளாக என்னை
தூக்கி எரிந்தபோது ...

அபசகுனமாய் கருதினாள்
என் முடிவை.
அபசகுனம் தான்
என் முடிவு எனக்கு!

என் மனதை புரிந்து கொண்டதனால்
திருமணத்தை பற்றி சொல்லாமல் விட்டாளோ?
இல்லை
என்னையே மறந்துவிட்டாளா?
தெரியவில்லை.

அவள்
யார் மீதேனும் காதல் கொண்டிருந்தாளா?
தெரியவில்லை.
அவள் மீது காதல் கொண்டவர்கள்
எத்தனை பேரோ ?
தெரியவில்லை.

ஒன்றை நான் உணர்ந்திருந்தேன்
நானும் அவள் மீது காதல் கொண்டு இருந்தேன் ......
அதை நான் மட்டுமே அறிந்து இருந்தேன் ....
இப்போது வரை..!

எழுதியவர் : சுதாகர் கதிரேசன் (23-Sep-13, 2:02 pm)
பார்வை : 122

மேலே