பேய் புடிச்சுருச்சு...!

பூசாரி கோடங்கியை அடிக்க ஆரம்பித்திருந்தார்.

தலைவிரி கோலமா உக்காந்திருந்த சேவத்தா மருமகளப் பாத்து எனக்கு தூக்கி வாரிப் போட்டிருச்சு. பேய் இருக்கு, பேய் மனுசங்கள பிடிக்கும்னு சொல்லிக் கேட்டு இருக்கேன். பேய் புடிச்ச ஆளுகள இதுவரைக்கும் நான் நேரா பாத்தது இல்லை. தலைவிரி கோலமா உக்காந்து இருந்த சேவத்தா மருமகள பாத்து ’பக்’க்னு ஆகிடுச்சு எனக்கு. நெத்தி புல்லா கோடாங்கி பூசுன விபூதி, குங்குமத்தோட பாக்கவே அகோரமா இருந்த அந்த புள்ளை 8 மாசத்துக்கு முன்னாடி சிதம்பரம் கட்டிக் கூட்டியாரும் போது எம்புட்டு அழகா இருந்தா...

கார விட்டு இறங்கி பொண்ணும் மாப்புளையும் சோடியா நின்னத பாத்து இந்த ஊரே மூக்கு மேல கை வச்சு வேடிக்கைப் பாத்துச்சு. அழகுனா அழகு அம்புட்டு அழகு பேருக்கு ஏத்த மாதிரி குமாரின்னா குமாரிதான்னு எங்க பெரிய ஆயா சொல்லி திருஷ்டி கழிச்சுப் போட்டது எனக்கு நேத்து நடந்த மாறி இருக்கு. என்னைய மாதிரி கல்யாணம் ஆகத பயலுக எல்லாம் கட்டுனா சிதம்பரம் கட்டிக் கூட்டியாந்த மாறி கட்டணும்டானு பேசி சிரிச்சுக்கிட்டு இருந்தோம். சேவத்தா ஓடியாந்து ஆராத்தி எடுத்து மருமகளை உள்ள கூட்டிக்கிட்டு போகயில கண்ணு வச்சி தொலைக்காதியடி பாவி பரப்பாயிகளான்னு தெரு முனையில நின்னுகிட்டு இருந்த எங்கூரு பொம்பளைக காது படவே சொல்லியும் புடுச்சு...

சேவத்தா அப்பத்த கூட எப்புடி ஒருத்தன் குடும்ப நடத்தி இருக்க முடியும்னு ஒரு பட்டிமண்டபமே வைக்கலாம். அம்புட்டு ஆங்காரம் புடிச்ச பொம்பள. தண்டட்டி அதிர அவ தடங்க் தடங்குனு கண்டாங்கி சேல முந்தானையை அள்ளிச் சொருகிகிட்டு ஒத்த கடைக்கு சாயா வாங்க லோட்டாவ தூக்கிகிட்டு நடந்தான்னா ஆத்தாடி தெருவே கிடு கிடுத்துப் போயிடும். இப்பத்தான் ஒரு மூணு வருசத்துக்கு முன்னாடி செத்து போனாரு சேவாத்தா புருசன். எப்பவாச்சும் குடிக்கிற பழக்கம் இருக்க அந்த மனுசன் குடிச்சா உடம்புல உசுரு இருக்காதுன்னு தெரிஞ்சேதான் அதையும் செய்வாரு. ஒரு நாள் ராத்திரி ஏழு மணிக்கு மாடுகளப் புடிச்சு தவிடு தண்ணி காட்டிப்புட்டு கொண்டாந்து பட்டில அடச்சு வைக்கோல அள்ளிப் போட்டுக்கிட்டு இருந்தப்ப விழுகுதய்யா அடி திம்மு திம்முனு சேவத்தா வீட்டுக்குள்ள... நான் வெல வெலத்துப் போய் ஆத்தி அந்த மிலிட்டிரிக்காரன் சேவத்தாவ வெளுக்காறனப்பே.. நான் போய் பாத்துட்டு வாரேன்னு....

ஊத்தி வச்ச கஞ்சித் தண்ணிய குடிக்காம சேவத்தா அப்பத்தா வீட்டு வாசல்ல நின்னு உள்ள முளையலாம்னு யோசிச்சு நின்னப்பா...." அடியே..... காளீளீளீஈஈஈஈ உனக்கு கண்னு இல்லையான்னு..." அந்த மிலிட்டரி ஐயா கத்திக்கிட்டு இருந்தாரு.....திம்மு திம்முனு சத்தம்.....அந்த அப்பத்தா தான் அந்த ஐயாவ அடிச்சுக்கிட்டு இருக்குன்னு வெளங்கிக்கிட்டு..... ஏப்புத்தா என்ன கரைச்சலுன்னு மெல்ல கதவோரம் போய் கேட்டதுக்கு...." போட போக்கத்தப் பயலே பொழப்பு தலப்பு ஒண்ணும் கிடையாதா ஒனக்கு...அடுத்த வூட்டுல என்ன நடக்குதுன்னு மோப்பம் புடிச்சுக்கிட்டு திரியுற நாய் மாதிரி'ன்னு சொல்லவும் வெல வெலத்துப் போய் வீட்டுக்கு ஓடியாந்துட்டேன்...அது நடந்து ஆச்சு ஒரு ஆரேழு வருசம்....

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு பெரிசா சத்தம் போட்டு நாக்க மடிச்சுக்கிட்டு.....தலைய சுத்தி சுத்தி சேவத்தா மருமக ஆடிக்கிட்டு இருந்துச்சு. நான் மெரண்டு போய் செவத்தோட ஒண்டிக்கிட்டேன். அந்த அறைவூட்டுக்குள்ள அப்பவோ இப்பவோண்டு மங்கலா எரிஞ்சுக்கிட்டு இருந்த மஞ்ச குண்டு பல்பு சாம்பிராணி, ஊதுவத்தி புகையில இன்னுமே மங்கிப் போயிருந்துச்சு. எனக்கு பேயி புடிச்சவள காட்டியும் இந்த மொட்டயாப் போற கோடாங்கிய காங்கயிலதான் இன்னும் பயமா இருந்துச்சு. அவன் ஆளும், மொகறையும், குடுமியும்.....துண்ணூறும்னு யோசிச்ச்சுட்டு இருந்தப்பவே....

ஏப்பே...மார்நாட்டார் பேரனே...ன்னு என்னைய கைய காட்டி கூப்புட்டாரு கோடாங்கி...! அட என்னிய என்னாத்துக்கு கூப்புடுறன்னு யோசிச்சுக்கிட்டே கிட்ட போனேன். சைகை காட்டி....இன்னும் கிட்ட வான்னு சொன்னாரு.. குனிஞ்சு அந்தாளு வாய்கிட்ட காத கொண்டு போனேன்...ஏப்பே...சரட்டுனு ஓடிப்போயி 10 ரூவாய்க்கு வெத்தலை பாக்கு வாங்கிட்டு....உசேன் பாய் கடையில கோழி ஒண்ண உசுரோட வாங்கிட்டு ஒடியான்னு சொல்லி முடிக்க முன்னாடி வெடுக்குனு நான் வெலகிக்கிட்டேன்....

அட பொசகெட்டப் பயலே...பேய ஓட்ட கட்டுக்கட்டா துண்ணூறையும் குங்குமத்தையும் பூசிக்கிட்டு வந்து ஒக்காந்தா மட்டும் போதுமா..வக்காலி காலையிலயே லோக்கல் சரக்க போட்டுக்கிட்டு இல்லய்யா வந்துருக்காம் இந்த கோடாங்கி...நாத்தம் குடலை புடுங்குச்சு எனக்கு. ஏய்யா... பேதில போறவனே பேய ஓட்றது எல்லாம் சரி குளிச்சுப்புட்டு வரப்புடாதா குடிச்சுப்புட்டு வந்துருக்கியேன்னு நான் சொல்லவும்... சேவத்தா மயன் சிதம்பரம்.. கொஞ்சம் வெரசா வாங்கிட்டு ஓடியாப்பு நான் அங்கிட்டு இங்கிட்டு நகரமுடியாதுன்னு என்ன கெஞ்ச ஆரம்ப்ச்சுட்டான்...

கோழி கழுத்த கடிச்சு துப்பி ரத்தத்தை சேவத்தா மருமக மேல பீச்சி அடிச்ச கோடாங்கி.. யாருடி நீய்யினு அதட்டி கேட்டாரு....அதுக்கு பேயி...எம்பேரு....பேச்சம்மை. ஏன் ஊரு கண்டரமாணிக்கம்...நான் செத்து நாலு வருசம் ஆச்சு...உனக்கு என்னடா வேணும்னு அதட்டி நாக்க கடிச்சி கண்ணு முழிய உருட்ட....அங்கன வேடிக்கபாத்துக்கிட்டு இருந்த சனம் பூரா வெல வெலத்துப் போச்சு....

சூரான சூரி, வீரான வீரி சேவத்தா மெரண்டு போயி ரெண்டு கையவும் எடுத்து கும்பிட்டுக்கிட்டு துன்னூற பூசிக்கிட்டு சம்மண கால் போட்டு உக்காந்து இருந்தத பாத்து எனக்கு குபுக்ன்னு சிரிப்பு வந்துடுச்சு. ஏப்பத்தா நீயல்லாமா பேயப் பாத்து பயப்புடுற.....தக்காளி உன்னிய பாத்துல பேயி பயப்பட்டுச் சாகணும்னு நினைச்சு சிரிச்சு வைச்சாலும் சேவத்தா மருமக உள்ள இருந்த பேயி நெசமாவே எல்லோரு ஈரக்கொலையவும் அக்க ஆரம்பிச்சிருந்துச்சு.

கோடாங்கி உடுக்கைய எடுத்து ” த்த்தூம்.. தும்...த்தும்ம்.. தும் த்தும்ம் தூம்...?னு அடிக்க பேயி ஆடிச்சி பாருங்க ஆட்டம்....ஏன்டா.. கண்டார ******** மகனே.. என்னடா ஒனக்கு வேணும்.....னு எட்டி கோடாங்கி முடிய புடிச்சு இழுத்து ரெண்டு அப்பு கோடாங்கிக்கு விட்டுச்சு பாருங்க, அதக்கண்டு பக்கத்துல இருந்த சேவத்தா அப்பத்தா ஆத்தி கோடாங்கியவே அடிக்கிறாளே....ன்னு பயந்து ஓட ஆரம்பிக்க....

சேவத்தா அப்பத்தாவ எவ்விப் பிடிச்ச பேயி...விட்டுச்சு ரெண்டு அறை சேவத்தாளுக்கு சப் சப்புன்னு... எங்கடி ஓடுற பொசகெட்ட சிறுக்கி..? கோடாங்கிய கூட்டியாந்து என்ன வெரட்டப் பாக்குறியான்னு நங்கு நங்குன்னு சேவத்தால மிதிச்ச மிதில எனக்கு ஏண்டா இங்க வந்து நின்னோம்னு ஆயிபோச்சு....கேப்பு கூட கிடையாதே ஓடன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்பாவே....சுதாரிச்சுக்கிட்ட கோடங்கி சேவத்தா மருமகள கையில இருந்த பிரம்பால அடிச்சு உக்கார வச்சாரு....

ஆத்தீ...இடுப்ப ஒடைச்சுப் புட்டாளே சக்காளத்தி எந்த காட்டுப் பேயோ... எங்குடிய வந்து கெடுக்குதேன்னு செவத்தோரமா ஒக்காந்து கண்ண கசக்கிட்டு இருந்த சேவத்தாவ பாத்து சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியல எனக்கு....

கோடாங்கியோட அடிக்கு பயந்து பேயி பேச ஆரம்பிச்சு இருந்துச்சு....

ஒன் பேரு என்ன....?

பேச்சம்மை...

எங்கன புடிச்ச இந்தப் புள்ளைய..?

கருவாட்டுப் பொட்டல்ல சுப்பி பொறுக்க வந்தப்ப பிடிச்சேன்....

ஒனக்கு என்ன வேணும்...?

எனக்கு கோழி வறுத்து மீங்கொளம்பு வச்சு, ஆட்டு ரத்தம் பொரிச்சு....ரெண்டு நாள் முச்சூடும் இந்த எடுபட்ட சிறுக்கி சமைச்சுக் கொடுக்கணும்...னு சொல்லி சேவாத்தால கைய காட்டிச்சு பேயி.....

அப்புடி செஞ்சா போவியா....?

முடியாது...

கோடங்கி கம்ப ஓங்கிக்கிட்டே பொறவு...என்ன வேணும் உனக்கு..?

ராத்திரி ராத்திரி எனக்கு கைய காலை புடிச்சு விடணும்....

அதை யாரு செய்யணும்...?

அந்த பொச கெட்ட செறுக்கிதான்....சேவத்தாவை மீண்டும் காட்டிச்சு பேயி(!!!!???)

செய்யச் சொல்றேன் இந்தப் புள்ளைய விட்டுட்டுப் போயிடுவியா....?

முடியாது.

நான் சாட்டைய எடுத்தாதேன் நீ சரிப்படுவ...எல்லாந்தேன் செய்றேன்னு சொல்றோம்ல பொறவு....என்ன மசுருடி வேணும் ஒனக்கு ....கோடாங்கி ஆவேசப்பட்டார்.

நான் ரெண்டு மாசத்துக்கு இங்கிட்டுதான் சுத்திக்கிட்டு திரிவேன். இந்த புள்ள உடம்புதேன் எனக்கு வாட்டமா இருக்கு. இந்தப் புள்ள இந்த ஊர்ல ரெண்டு மாசத்துக்கு இருக்கவே கூடாது......

இருந்தா மறுபடி புடிப்பேன். அவ ரெண்டு மாசம் இங்கன இல்லேன்னா நான் எம்பாட்டுக்கு போயிருவேன்....

கோடாங்கி சேவத்தாள பாத்து.... ஏத்தா என்னா செய்ய.. பேயி கேட்டத்த செஞ்சுடுவோமா...? செஞ்சுதேன் ஆகணும்த்தா..ஆங்காரம் புடிச்சா பேயாவுல்ல இருக்கு....

சேவத்தா அப்பத்தா கைய எடுத்து கும்பிட்டு...செய்ஞ்சுருவோம் சாமி...பேய மட்டும் பத்தி விட்டுறுங்க...நீங்க நல்லா இருப்பியன்னு கெஞ்ச...

எல்லாம் செய்றோம்...நீ இப்ப இந்த புள்ளைய விட்டுப் போறியா....? கோடாங்கி அதட்டினார்....

நான் இப்ப இந்த புள்ளைய விட்டுபோக மாட்டேன்...ரெண்டு நாள் இருந்து எல்லாம் திண்டு முண்டு புட்டு....அவ ஊருக்கு போன பெறகுதான் போவேன். எல்லாத்துக்கும் கோடாங்கி ஒத்துக்கிட்டு தேங்காய் ஒடைச்சு ...கருப்பா......ன்னு கத்தி பூசைய ஆரம்பிச்சாரு.....

எம்புட்டு வெளம் புடிச்ச பேயா இருக்கே சாதிச்சு புடிச்சய்யா.... இப்புடித்தேன்....தங்கராசு அத்தைக்கி பேய் புடிச்சு அல்லோல கல்லோலப் படுத்திப் புடிச்சு...முருகாயி வீட்ல கூட இப்டித்தேன்....

ஏப்பு ரெண்டு நாளைக்கு முன்னாடி ரெண்டாவது ஆட்டம் சினிமா விட்டு வரையில கம்மாக்கரை ஓரமா நாளைஞ்சு பேய நான் பாத்தேன்ப்ப்பு......

அட கொள்ளி வா பிசாசுன்னு ஒண்ணு இருக்கப்பு...அதுவும் கருவாட்டுப் பொட்டல்லதேன் இருக்கு....நான் அன்னிக்கு வயல்ல தண்ணிய பாச்சிட்டு வரையில வரப்பு ஓரமா தலையில நெருப்பு எரிஞ்ச மேனிக்கு ஓடுச்சப்பா....

பர்மாக்காரு மருமக தூக்குப் போட்டுச் செத்துப் போச்சுல்ல...அது வீடு வீடா வந்து ராத்திரி பன்னென்ன்டு மணிக்கு மேல.....பசிக்குதுன்னு கதவு தட்டி சோறு கேக்குதாம்ம்பா....

ஆளாளுக்கு பேசிக்கிட்டெ சேவத்தா வீட்ட விட்டு நகந்து போயிகிட்டு இருந்தாக....

மோகினி பிசாசா இருக்கட்டும், காட்டேரியா இருக்கட்டும் குட்டிச்சாத்தானா இருக்கட்டும்....அதான் நான் இருக்கேல்லா மக்கா என்ன பயம்னு சொல்லிக்கிட்டே

ஒத்துக்கிட்ட மாதிரி எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துட்டு இந்த புள்ளைய அவுக அப்பன் வீட்டுக்கு ஒரு ரெண்டு மாத்தைக்கு அனுப்பி வைய்யி அம்மாயி எல்லாம் சரியாப் போயிடும்....சரி சரி தட்சணையவு கொடு நான் போறேன்னு கோடங்கியும் கெளம்பிகிட்டு இருந்தாரு.

சேவத்தா மயன் எங்கிட்ட வந்து....

ஒரு வாரத்துக்கு முன்னாடியே.. இங்க வேல வேலன்னு என்ன கொண்டு எடுக்குது ஒங்காத்தா..கொஞ்ச நேரம் கூட ஓய்வு ஒழிச்ச இல்ல...ஏதாச்சும் கேட்டா...தட்டுவாணி முண்ட எதித்தா பேசுறன்னு முள்ளு கம்ப எடுத்துக்கிட்டு அடிக்க வருதுய்யா, என் கைய பாரு பாத்திரம் தேச்சு முள்ளு வெட்டி பொத்துப் போய் கெடக்கு.. என் காலப் பாரு.. கருவ முள்ளு குத்தாத எடமே இல்ல... என்னிய பேசாம எங்கப்பன் வீட்ல ஒரு ரெண்டு மாசம் கொண்டு போயி விடுய்யான்னு கெஞ்சுனா பாவி மக....

அப்புடியாச்சும் செஞ்சு இருந்த இந்த பாவிப் பேயி புடிக்காமலேயே இருந்திருக்கும்டா மாப்புளன்னு சொல்லி கண்ண கசக்கினான்....

என் மூளைக்குள்ள பளீச்ச்னு பல்ப் ஒண்ணு எரிய அங்கிட்டு ஓரக்கண்ணால சேவத்தா மருமகளா பாத்தேன்....

முடிய புடிச்சு இழுத்து சுருட்டிக்கிட்டு காலை நீட்டிக்கிட்டு....எனக்கு இப்ப பசிக்குதுடின்னூ சேவத்தாவ ஒரு அதட்டுப் போட.....சேவத்தா இந்தா வந்துட்டேன்டி ஆத்தான்னு அடுப்படிக்குள்ள ஓடவும்....

நான் மெல்ல பேயி கிட்ட ச்ச்சே ச்சே சேவத்தா மருமக கிட்ட போயி " பேச்சம்மை...."ன்னு கூப்புட்டு மெல்ல சிரிச்சேன்....சேவத்தா மருமக தலை முடிய ஒதுக்கி விட்டுட்டு ....என்னிய நிமிந்து பாத்து......அண்ணேன்னு கூப்டுட்டு கேவி கேவி அழ ஆரம்பிச்சுது.....

” ஏய் மாப்புள பேய்கிட்ட போய் என்னப்பா சகவாசம் ரெண்டு நாளைக்கு அது கிட்ட போகாத கோடங்கிதான் சொல்லி இருக்காப்ள இல்ல....இங்கிட்டு வாய்யா....”

சிதம்பரம் என்னை கூப்பிட்டான்.

நான் பேயின் தலை தடவிக் கொடுத்து விட்டு ...தைரியமா இருத்தா....ன்னு சொல்லிட்டு எந்திரிச்சு வீட்டுக்கு கிளம்பினேன்.....!


பேயி இருக்கதாம்யா செய்யுது....இந்த உலகத்துல....


கண்ணீரோடு நடந்து கொண்டிருந்தேன்!

எழுதியவர் : Dheva.S (19-Oct-13, 5:44 pm)
பார்வை : 349

மேலே