இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா தொடர்ச்சி 5
தொடர்ச்சி 5....
ஒரு முஸ்லீம், தீவிரவாதியாக இருப்பதற்காக ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டு பேசினாலும், அதற்கு இஸ்லாம் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? கத்தரிக்காயை வெட்டுவதற்குப் பதிலாக கழுத்தை வெட்டுவது கத்தியின் குற்றமாகுமா? இன்று 'அல் காய்தா' க்களும் 'லஷ்கர் தொய்பா' க்களும் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்கலாம். ஆனால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. ஓர் இயக்கத்தின் பெயர் அரபி மொழியில் இருப்பதனாலேயே அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமுள்ளது என்று நினைக்கத் தேவையில்லை.
பல திரைப்படங்களில் கூட "புனிதப்போர்" என்ற அர்த்தத்தில் "ஜிஹாத்" என்ற சொல்லைப் பயன்படுத்தி வசனங்கள் வருகின்றன. அந்த சொல்லுக்கு திரைப்படங்களில் வருவது போல அப்படி ஒரு பொருள் இல்லை. வாளைக் கொண்டு எதையும் பரப்புவதென்பது தர்க்க ரீதியாகக்கூட அபத்தமானது. வாளைக்கொண்டு ஒரு விடயத்தை கொல்லலாமே தவிர சொல்ல முடியாது.அழிக்கலாமே தவிர ஆக்க முடியாது. பரப்புவது என்பது ஆக்கமே தவிர அழிவல்ல.
ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்வதென்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்ததே தவிர உடல் சார்ந்ததல்ல. வாள் என்பது மனத்தோடு தொடர்புடையதல்ல. அதன் உறவு உடலோடு மட்டுமே. அமைதி மார்க்கமான இஸ்லாம், வாளால் பரப்பப்பட்டது என்பதைப் போன்ற வடிகட்டிய பொய்பிரச்சாரம் வேறில்லை.
அப்படியானால், இறைவனும் இஸ்லாமிய வரலாறும் சொல்வது என்ன என்று தெரியாத அல்லது தெரிந்துக்கொள்ள விரும்பாத அல்லது தெரிந்தும் தெரியாதமாதிரி இருப்பவர்களின் பேச்சைத் தவிர வேறொன்றுமில்லை இது.
தூங்கிக் கொண்டிருப்பதைப்போல நடிப்பவர்களை 'எழுப்புவது' நமது நோக்கமல்ல. எனினும் இந்த கற்பனையான குற்றச்சாட்டின் பின்னனியில் உள்ள உண்மைகள் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?
முற்றும்
இனி வேறொரு கட்டுரையின் மூலம் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி
நாகூர் ரூமி.