மழை
எப்போதும் என்னைச் சிலிர்க்க வைக்கும் மழை; நனைந்து ஆடிப்பாடத் தூண்டும் மழை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் நனைந்த குழந்தைப் பருவத்தை ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன் நான். வயது கூடியது, கூடவே ஆடை பற்றிய கவனமும்.. குறைந்து போனது மழைக்குளியல்கள் மட்டுமே... பள்ளிப்படிப்பு அமில மழை பற்றி கற்றுத்தந்து மேலும் குறைத்தது மழையில் நனையும் ஆசைகளை... படிப்பு முடிந்ததும் வந்து ஒட்டிக் கொண்டது வேலை மட்டுமல்ல மடிக்கணினியும் தான். கூடவே இரண்டாம் இதயமாய் செல் பேசியும்.... நீர் பட்டால் கேட்டுப் போகும் இவற்றுக்காக முற்றிலும் நின்று போனது மழையில் நனையும் எண்ணங்கள்... ஒரே ஒரு முறை எதைப் பற்றியும் யோசியாமல் மழையை ரசிக்க முடியுமா? எப்போதும் போல் விடை கிடைக்கும் முன்னரே நின்று விட்டது மழை.... நான் மரமாக பிறந்திருக்கலாம்; விருப்பமோ வெறுப்போ முழுதுமாய் நனைந்திருப்பேன்... ஆனாலும் என்றோ ஒரு நாள் நனைவதற்காக வாழ்நாளின் முக்கால் பகுதியை வெயிலுக்கு தாரை வார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான்... மற்றுமொரு மழை வரட்டும் அதுவரை வழக்கம் போல யோசனையோடு தொடரட்டும் வாழ்க்கை...

