மகள்

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!!

என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசு என்றும் , மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்.....

எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை.....

வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்.....

இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....?

மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே...

இறந்தால் நாம் எங்கு போவோம்.....

இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்?

கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....?

வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதாரணமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையாட அவளுக்குத் துணை ஒரு ப்ளாக்கி (டெரி ப்யர்), ஒரு சோனு...(ஒரு பையன் பொம்மை) ஒரு...டோனி...(ஒரு குட்டி பொம்மை நாய்) மேலும் ஒரு...சின்ரலா.....

இவளின் உலகம் அதுதான்......! ஒரு நாள் இரவு அவளை உறங்க வைத்த பின்பு....ஹாலுக்கு வந்து பார்த்த நான் .. எதேச்சையாக கவனித்தேன்.....இந்த நான்கு பொம்மைகளும்... சோபாவில் படுக்க வைக்கப்பட்டு அதற்கு அவளின் துண்டினால் போர்த்தி விடப்பட்டு இருந்தது....! அதுவும் வரிசையாக.....! அவர்களை உறங்க வைத்து விட்டுத்தான் அவள் உறங்குவாளாம்...ஏன் அவுங்களுக்கு தூக்கம் வராதா..? இது அடுத்த நாள் அவள் விதைத்த கேள்வி....

ஆச்சர்யமாகத்தான் இருந்தது... அவளின் கடந்த பிறந்தநாள் எனக்கு....! ஆமாம்.....குழந்தை குழந்தை என்று பார்த்து கொண்டிருந்த நான் முதன் முதலாய் அவள் வளர்ந்த சிறுமி என்று உணர்ந்தேன்....! வளர்ந்த முடியில் குதிரை வாலும், ஸ்கை ப்ளூ கலர் குட்டிச் சுடிதாரும்....ஹை ஹீல்ஸ் செருப்பும் என்று அவள் பள்ளிக்கு என்னோடு தயாரான கணத்தில் ஒரு கணம்.. எனக்குள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஒரு வித..பட படப்பும்.....ஆமாம் பிள்ளை வளர்ந்து விட்டாள்...உள்ளே ஒரு மூலையில் ஒரு மணியும் அடித்தது.....

பெண் பிள்ளைகள் சடாரென்று வளர்ந்து விடுகிறார்கள். அவளின் உடைக்கு மேட்சாய், கிளிப், நெயில் பாலிஸ், செருப்பு, மற்றும் இன்னும் பிற பொருட்களும் வேண்டும் என்று கேட்ட பொழுதில்....என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.....ஒரு வித கேள்விக் குறியோடு....!!!! எப்படி இவள் இதை எல்லாம் கேட்கிறாள்....இது உன்னுடைய ஐடியாவா என்று பார்வையால் கேள்வியை தூக்கி போட்டேன்....அவள் இல்லவே இல்லை என்று தலையாட்டினாள்.....

வாழ்க்கை போகிற போக்கில், தொலைக் காட்சியாகவும், பள்ளித் தோழர்களாகவும், சுற்றுச் சூழலாகவும் பயிற்றுவித்து விடுகிறது. இயற்கையிலேயே அவர்களுக்கு இருக்கும் குணாதியங்களும் கூடி அதற்கு ஏற்றார் போல விருப்பப் பொருட்களின் மீது கவனமும் சென்று விடுகிறது.

என்னுடைய புரிதலில் பெண் ஒரு மிகப் பெரிய பிரபஞ்ச சக்தி....! ஒன்றை ஆக்குவதில் அவள் துணையின்றி எதுவுமே நிகழ சாத்தியமில்லை.....! அதுவும் அந்த சக்தி என் வாழ்க்கையில் பெரும் பங்கைத்தான் ஆற்றிக் கொண்டிருக்கிறது, அம்மா, அக்கா, மனைவி, குழந்தை, அலுவலகத்தில் பாஸ் என்று...அந்த சக்தியின் ஓட்டத்தையும் அதன் வீரியத்தையும்...வேகத்தையும் மிக அருகில் இருந்து படிக்கும் ஒரு அனுபவம் வாய்த்திருக்கிறது.......

உலக இயக்கத்தில் சிவமாய்.. இருக்கும் எதுவமற்ற தன்மை....இயங்க ஆரம்பிக்கும் போது சக்தியாய் மாறுகிறது.....இந்த தத்துவத்தை உணர்த்தும் ஒரு சிம்பாலிக் போஸ்டர்தான்.....அர்த்த நாரீஸ்வரார்.....

சிவம் இல்லையே...சக்தி இல்லை......சக்தி இல்லையேல் சிவம் என்ற ஒன்று இருப்பதே அறிய முடியாது....!

சாக்த வழிபாடு என்று திராவிட தொல்மரபில் சில வழக்க முறையில் இருந்திருக்கின்றன. பெண்ணை தெய்வம் போல நினைத்து வழிபட்டு போற்றக்கூடிய முறை. ஆமாம் பெண் என்பவள் உணர்வு பூர்வமானவள் அன்பின் அடையாளம் அவளை அன்பு செய்து அரவணைத்தல் மூலம் அவளின் சக்தி ஆணுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது...

அது எப்படி.. சக்தி பரிமாற்றம் ஆகும்? பெண்ணை வழிபடுதல் போல ஆணையும் வழிபட்டுள்ளாள் பெண் என்ற கேள்விகள் எல்லாம் வருதா... அது எல்லாம் விளக்கமா சாக்தம் பற்றி எழுதும் ஒரு நாளில் பார்ப்போம்.. ஆமா அது என்னிக்கு....தெரியலையே....ஏன்னா..

ஆண்டவன் சொல்றான்... .............மீதிய நீங்களே பில் அப் பண்ணிக்கோங்க.... :-)

எழுதியவர் : Dheva.S (22-Nov-13, 10:53 am)
Tanglish : magal
பார்வை : 240

சிறந்த கட்டுரைகள்

மேலே