முத்தொள்ளாயிரம் சேரன் 16 நேரிசை வெண்பா

முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா

வானிற்கு வையகம் போன்றது வானத்து
மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து
மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர்
கோன்சேரன் கோதையென் பான்! 16

பொருளுரை:

இது சேரனின் சிறப்புக் கூறுவது.

இந்நிலவுலகம் வானத்தைப் போன்றது; இவ்வுலகை யாளும் மன்னர்கள் வானத்தில் விளங்கும் விண்மீன்களைப் போன்றவர்கள்;

விண்ணளவு உயர்ந்த கொல்லிமலையின் தலைவனான சேரமன்னன் விண்மீன்களுக்கிடையே வீறுடன் உலாவரும் வெண்ணிலாவைப் போன்றவன்.

வையகம் வானைப் போன்றது எனக் கூட்டுக.
‘வானிற்கு’ என்பது உருபுமயக்கம்;
மீன் - விண்மீன்; கோன் - தலைவன்;
சேரன்கோதை - இருபெயரொட்டுப் பண்புத் தொகை.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (30-Jul-25, 9:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே