அவள் வரலாம்

நினைவுகளை ஏந்தி
காத்திருக்கிறேன்...
மீண்டுமொருமுறை
அவள் எனைக் காண வரலாம்...
என்னுள் ஏகாந்தக் கனவுகளைப்
பரப்பிப் போட்டு
பழுப்பேறிப் போயிருக்கும்
என் நாட்களுக்கு
வர்ணங்கள் தீட்டலாம்..!

எரிந்து போன விறகின்
கடைசி முயற்சியாய்
மெலிதாய் துளிர் விடும்
சிறு கங்கினைப் போல
கனன்று கொண்டிருக்கும்
என் காதல் அவள்
சுவாசத்தை எரிதிரவமாக்கி
மீண்டும் அனல் பரப்பி
பற்றிப் பரவலாம்...!

நீண்டு கொண்டே இருக்கும்
பொழுதுகளின் மடிப்புகளில்
குற்றுயிரும் குலை உயிருமாய்
முனகிக் கொண்டிருக்கும்
காதலை அவள் ஒரு வேளை
அவள் விழிகளை என்னுள்
ஆழப் பதித்து மீட்டும் எடுக்கலாம்...

அயற்சியில் அமிலம் சுரக்கும்
புத்தியில் நினைவுகள்
மெல்ல மெல்ல மரிக்கையில்
அவள் வரவுக்காய் வீதியில்
படிந்து கிடக்கும் விழிகளோடு
காத்துக் கிடக்கிறது
என் உயிரும்..அவள் மீதான காதலும்...

எழுதியவர் : (23-Nov-13, 9:48 pm)
Tanglish : aval varalam
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே