காலண்டர் – ஒரு பக்கக் கதை

காலண்டர் – ஒரு பக்கக் கதை
********************************************
கோபத்துடன் எரிச்சலும் சேர்ந்தே வந்தது மாலதிக்கு.
-
எப்பொழுதும் மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டுக்குத்
தேவையான அனைத்துப் பொருட்களையும் குமார்
ஸ்டோர்லயே வாங்கிவிடுவார்.

இப்ப மட்டும் ஏன் இப்படி ஒவ்வொரு பொருளுக்கும்
ஒவ்வொரு கடையா ஏறி இறங்குறாரு? மாலதிக்கு
ஒன்றும் புரியவில்லை. கணவனை பின் தொடர்ந்தாள்.
-
இன்னும் முடிந்தபாடில்லை. “அவ்வளவுதானா, புதுசா
கடை ஏதாவது இருக்கா…?’ கேட்டே விட்டாள்.
-
“கோபப்படாத மாலு… இத்தனை கடை ஏறி இறங்கியதுல
எத்தனை காலண்டர் இலவசமா கிடைச்சிருக்க பாரு.’
-
“நீங்க என்ன காலண்டர் பைத்தியமா… ஏற்கெனவே
நம்ம வீட்டுல ஏழெட்டு காலண்டர் கிடக்குது.
எல்லாத்தையும் உங்க கழுத்துலதான் மாட்டிக்கிட்டுத்
திரியணும்…’ படபடத்தாள் மாலதி.
-
“அப்படிச் சொல்லாதே மாலு. நாம நகரத்துல இருக்கோம்.
ஏதோ ஒரு கடையில காலண்டர் சும்மா கிடைச்சுடுது.
ஆனா நம்ம கிராமத்த நினைச்சுப் பாத்தியா. ஒரு
காலண்டர் வாங்கணும்னா நாற்பது ஐம்பது ரூபா
ஆகும். நாம் இப்படி வாங்கிட்டுப் போயி, கிராமத்துக்குப்
போறப்ப மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா, அக்கம்
பக்கம்னு ஆளுக்கு ஒண்ணா கொடுத்தோம்னா, அவங்க
மனசு எவ்வளவு சந்தோஷப்படும்…’ என்ற கணவனை
வாஞ்சையோடு பார்த்தாள் மாலதி.
-
——————————
>பட்டவர்த்தி ஆதி. சௌந்தரராஜன்

எழுதியவர் : பட்டவர்த்தி ஆதி. சௌந்தரரா (22-Dec-13, 11:42 am)
பார்வை : 136

மேலே