அகனே, அன்பின் மகனே மீள் பதிவு
பட்டமொன்று - என் வானில்
பட்டொளி வீசிப் பறக்கிறது,
அகனெனும் அனந்தனால் !
நன்றியெனும் மூன்றெழுத்து
முழுதாய் எந்நன்றியை
ஒப்புவிக்கும் திறனற்றது !
இரட்டை வரிகோடுகளால்
இணைந்த இதயமிது !
அந்த நான்குவரி கவிதை
அகனார் மனதில் - நான்
போட்ட முதல் துண்டு !
போட்ட முதல் குண்டு !
அவ்வப்போது வந்துபோகும்
விருந்தாடியாகவே - பலநாள்
இருந்தது அந்த கருந்தாடி !
என் மனதின் காத்தாடி !
தடம் தெரியா
ஓர் காரணத்தால்
ஆலமரம் - அடிக்கடி
என் வரிகளுக்குள்
வந்து சென்றது !
வந்து வந்து - என்
மனம் வென்றது !
என்னை முடுக்கிவிடும்
வேலையை - செவ்வனே
செய்ததும் அதுவே !
பிழைகள் சுட்டும்
பேராயம் - கருத்து
கொட்டும் கூடராம் !
குழைத்த மண்ணாய் நான்,
குனிந்து எடுத்து - செதுக்கி
குழந்தையாய் பாவித்து
என்மனம் சுடாமல்
என்னைசுட்டு - எனக்கே
தெரியாமல் என்னிலிருந்து
எனக்கொரு என்னைக்
கொடுத்த கொடை - என்
புன்னகையின் உடை !
என் வரிகளை
சல்லடை கொண்டு
சலித்தபின் - ஓரிருவரி
விழுவதுண்டு கருத்தாய் !
பெரும்பாலான - வரிகள்
அழுதுபுலம்பும் - இவர்
காணதது கண்டு - அதையும்
அவர் காண்பது உண்டு !
செங்கீரைப் பருவ
குறும் பாலகனாய்
எனைப்பாவித்து
என்னுள் பா வித்து
விதைக்கிறார் - நான்
விளைகிறேன் - நல்ல
விலையும் போகிறேன் !
எழுத்துலக பொடியனுக்கு
தன் இருகரம் தந்து
நடை பழக்குகிறார் !
நாடைப் பழக்குகிறார் !
எனக்கு எதில் குருவென
தெரியவில்லை - இவர்
என் குருவென கடவுள்
வரமொன்று கொடுத்தபோது !
என் குழந்தை ஒன்றை
குளிப்பாட்டி - யுத்தத்தின்
சுவட்டுக்குள் உட்காரவைத்தார் !
என் முதல் பிரசவம் !
என் முதல் பிரவேசம் !
நீ என் - காதுக்குள்
விழுந்தது குறைவு !
மனதுக்குள் விழுந்தது
முழு மன நிறைவு !
உன் பாதியிடம்
என்னை அறிமுகம்
செய்கையில் செய்தது
எனக்கு பசுமரத்தாணி !
எனக்கு பசுமை தர வா நீ !
உனக்கும் எனக்குமான
உறவு - நட்புகளின்
நவரசத்தோடு - காதலின்
பழரசமும் கலந்த - ஓர்
உணர்வைத் தருகிறது !
உண்ணத் தருகிறது !
என் நிரந்தர குருவாய்
வீற்றிரு - உலகில் நீ
கைகாட்டும் வெற்றிகள்
உன்காலடி சமர்ப்பிப்பேன் !
குருதட்சணை யாதென சொல் !
யாசித்தாவது தருவேன் கொள் !
என் கவிகளின்
விட்டமளந்து - பட்டம்
தருகிறாய் - கட்டங்களுள்
அடங்காத வரிகளுக்கு
சட்டம் அடித்து
சந்தோசம் கொள்கிறாய் !
காலதேவன் - என்னைத்
தீண்டும்வரை - என்னுடன்
இருந்தாயேயானால் - எனக்கு
இரு தாயல்லவா ?
இருப்பாயா தலைவா ??
(இச்சிறுவனுக்கு 2012 ல் "பன் பாடுபொருள் மாமணி-2012" எனும் பட்டமளித்த எனது குரு 2013 ல் "அறிவியல் பரப்பு பா ஏந்தல்" எனு பட்டமளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அகனாருக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். மேலும் என்னைப்போல் பட்டம் பெற்ற உறவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், என்னை ஊக்கிவிக்கும் உறவுகளுக்கு எனது நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்)

