இமை சேர

இமை சேர
இன்று எனக்கு பிறந்தநாள் விளக்கு கம்ப நண்பனுடன்
பூமகளின் கைகுலுக்கல் எட்டி நோக்கிப் பார்க்கையில்
அடுத்த வீட்டில் உடல் நலமில்லாத
தாத்தா பாட்டியின் மார்கழிமாத பச்சைத் தண்ணீர்
குளிர் குளியல் காண மனமின்றி வாடும்
அவலநிலை காண மறுக்கும்
இலை இமையில் ஒட்டிய கண்ணீரை
துடைக்க யார் வருவார்?
இதயமும், எலும்பும் உருக்குலையும் நாளை
எதிர்பார்த்து எலியின் எச்சத்தில் கலந்த ரேஷன்
இட்லியின் சிறு விள்ளலை அள்ளி எடுக்க மறுக்கும்
நான்குகால் நன்றியுள்ள இனத்தின் பச்சைக் கண்ணில்
ஏனிந்தக் கண்ணீர்?
உங்களுக்குமா இந்த உணவு எனக் கேட்கிறதோ?
பாடுபட்டுப் பணத்தைப் புதைத்து வாழும் கேடு கெட்ட
மானிடருக்கு நெய்ப்பந்தம் பிடிப்பவனுக்கு வழிவழியாய்
கட்டிய வீட்டை காட்டும் கர்ண பரம்பரை
மாறும் அதிசயம் காண விழைகின்றேன்
காலடியில் குனிந்து பார்க்க மனமில்லை
கசங்கிய கந்தல் துணியுடன் கண் தெரியாத தாத்தா
காற்றுடன் கையசைத்து புரியாத ஹப்பி ஹப்பி
பாஷையுடன் வழி கேட்பதைப் பார்க்க
வண்டிமைகள் பதைபதைக்க இலைகளோ மனம் துடிக்க
நான் மட்டும் கிளைகளில் மரகதமும் நீலமும்
மிளிர ஒளி விளக்குகளில் சரம் சரமாய் என் கைக்கிளைகளில்
வளையுடன் ஒளிர்கின்றேன்!
இன்று பிறந்தநாள் விழா இயேசுவுக்கு ஆணியில்
பலகை அடித்தவர் இங்கே எனக்கு
ஆணியுடன் விளக்குமாலை அலங்காரம்
செய்வித்து மகிழ்கின்றார்
கண்ணீர் மாலையுடன் செல்கின்ற பெண் மகளின் வறண்ட மனதில்
வருணபகவான் கண்துடைக்க வந்திடுவாரோ
என பயந்து தாருடன் கவச குண்டலம்
பூதேவி செவியினில் அணிவித்து மகிழ்கின்றார்
அரை ஆடையில் உலாக்காணும் பெண்மகளை எண்ணி நாணுகிறாள்
பாரதி காண விரும்பிய பெண் இவளல்ல எனக் குரலெடுத்துக்
கதறுகிறாள்!
உள்ளிருந்து உரைத்தவை ஊமையின் உளறல்ல!
விடியல் நேர ஆதித்ய மர நடனத்தின் அலங்கோலம்
குடித்துக் கெடுத்து பெண்உரிமை மறுக்கும்
இவ்வுலகைக் காண நான் செய்த பாவத்தை
எண்ணி இங்கு வசிக்கின்றேன்.
இமை சேர இலை கருகி பழுத்த இலைகள் படும் பாட்டை
எண்ணி இங்கு சிரிக்கின்றேன்!
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் எனப் பாடிய
சாலையோர சிறுவனின் படிப்பை முகர்ந்து பார்க்கின்றேன்
மணமாய் இருக்குது! மனமற்ற மனிதர்களிடம் படிப்பு மட்டும்
சுதந்திரதேவி சிலை வாசம் போல் மணக்கிறதே!
மகிழுந்து மந்திரம் வேகமாக இனிக்கும்
அதிசயம் காண மனமின்றி இமை சோர
வளர்கின்றேன்!
என்று வருவார்கள் இன்னொரு காந்தியும்,
அன்னை தெரசாவும், அண்ணல் அம்பேத்காரும்!!!

எழுதியவர் : (25-Dec-13, 5:51 pm)
Tanglish : imai sera
பார்வை : 99

மேலே