எதுவாயினும் சுபமாகட்டும்
விரல்களின் இடையில்
இணையாய் வளர்கின்றன
துணை விரல்கள் ,
புள்ளிகளிடப்பட்டு இன்னமும்
வண்ணம் தீட்டாக் கோலத்திற்காய்...
எதிர்பாரா நிகழ்வுகளினூடே
அனுபவித்த சில துக்கங்களில் ,
மடித்துவைக்கப்பட்ட என்னை
மீட்டெடுத்து எழுகிறேன்
துடைத்தெறியப் போகும் உந்துதலுக்காய் ...
எந்த விதைகளும்
தூவவில்லை - கடந்த வருடத்
தோட்டத்தில் பறித்த மலர்களின்
நறுமணமோ
பல இனிய தருணங்களை
நினைவுகூறும் அமரத்துவமானது ...
எங்கோ கேட்கும்
கூச்சல்கள் பழகியவை ;
ஆனாலும் அவையன்றிக் - கடந்த
பல வருடங்களின்
பிறப்புக்கள் பதிவுசெய்யப்படவில்லை
இரவொன்றின்
ஒளிவிழாக் காணீர் - அவ்விதமே
ஒளியற்றோரையும் ;
தீபமாகத் துணிந்தால்
நெருப்பு கூட பழகத் தணியும் ...!
பல்வகை உணர்வுகளும்
பந்தியில் பரிமாறப்படுவதே
வாழ்வின் விருந்தெனில்
எதை ஒதுக்குவீர் ?! - படைப்பின்
சுவையறியாது போவீரோ ?!
மாவிலைத் தோரணங்களாய்
மனதெங்கும் கட்டப்படட்டும்
பக்குவக் கொடிகள் ,
வருகின்ற எதுவாயினும்
சுபமென்றாகட்டும்...!
மொட்டுக் கூட்டங்களின்
கட்டவிழும் மென்னுணர்வாய்
சில பேரார்வ
மணித்துளிகளின் தொடுதலில்
மலர்கிறது புத்தாண்டு......!

