கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கக்கூடிய பணத்தை என்ன செய்வார்கள்

கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கக்கூடிய பணத்தை என்ன செய்வார்கள்? கோயில் கட்டுவதற்கும் கோயில் செலவுகளுக்கும் பயன்படுத்துவார்கள். ஆனால், அசோக் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகமோ, உண்டியல் பணத்தை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

'ஆஞ்சநேய பக்தர்கள் சபா’ அமைப்பைச் சேர்ந்த சரவணனிடம் பேசினேன். '' இந்தக் கோயில் கட்டி 17 வருஷங்களாச்சு. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கிற பணத்தை வெச்சு, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்றோம். வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவச் செலவு செய்றோம். ஜாஃபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் போன்ற பகுதிகள்ல இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் சென்டர் நடத்துறோம். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள 20 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலா 10,000 ரூபாய் கொடுத்திருக்கோம்.

கோயில் வளாகத்திலேயே, மருத்துவர்களை அழைத்துவந்து, இலவச மருத்துவ சிகிச்சை கொடுக்கிறோம். ரெண்டாவது சனிக்கிழமையில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்துகிறோம். எந்தச் சிகிச்சைக்கும் கட்டணம் வாங்குவது கிடையாது. அதே போல நன்கொடைனு யார்கிட்டயும் கேட்கிறது இல்லை. பக்தர்கள் உண்டியலில் போடும் பணத்தில்தான் இந்தச் சேவைகளைச் செய்றோம்.



இந்தப் பகுதியில் இருக்கும் ஏழை மாணவர்கள் 150 பேருக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் கொடுத்தோம். ரத்த தான முகாம், கண் சிகிச்சை, பல் சிகிச்சைனு மாசத்துக்கு ஒரு முகாம் நடத்திடுவோம். இலவச யோகா வகுப்புகளையும் நடத்துறோம். மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவைனு சொல்வாங்க. அதைத்தான் நாங்க செஞ்சுட்டு இருக்கோம்'' என்கிறார்.



நாம் அங்கே சென்றபோது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம் நடந்துகொண்டு இருந்தது. சிகிச்சைக்காக வந்திருந்த சாந்தி '' எனக்கு மூட்டு வலி இருக்கு. ஆஸ்பத்திரிக்குப் போய் வைத்தியம் பார்க்க வசதி இல்லை. இங்கே காசு வாங்குறது இல்ல. மூணு மாசமா வந்து வைத்தியம் பார்த்துட்டு இருக்கேன். இப்போ பரவாயில்லை. அந்த ஆஞ்சநேயரே வந்து வைத்தியம் பார்க்கிறார்னு நம்புறேன்'' என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு.

இதை எல்லாக் கோயில்களிலும் பின்பற்றலாமே!

எழுதியவர் : முரளிதரன் (28-Jan-14, 7:44 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 146

மேலே