மேகத்துக்கு தாகம்----அஹமது அலி----

சூரியனுக்கு
குளிரென்றது
கம்பளி போர்த்தினேன்.....
இரவானது..!
/*/
நிலா
பறக்க ஆசை கொண்டது
சரியென்றேன்....
மின்மினியானது...!
/*/
வானம்
ஒப்பனை செய்யச் சொன்னது
வண்ணமடித்தேன்....
வானவில்லானது..!
/*/
பால்வெளி
பம்பரம் சுற்றிக் கேட்டது
சுற்றி விட்டேன்....
கோள்களானது..!
/*/
வானமும் பூமியும்
இணைய இணக்கம் என்றது
இணைத்துப் பார்த்தேன்....
தொடுவானமானது..!
/*/
கடல்
நகரம் சுற்றிக் காட்டச் சொன்னது
அழைத்து வந்தேன்....
ஆழிப் பேரலையானது...!
/*/
வெண்மதி
குளத்தில் மீன்கள் வேண்டுமென்றது
கொட்டி விட்டேன்....
விண்மீன்களானது..!
/*/
நீர்ப்பாம்புகள்
நீண்டு ஓட நிலம் கேட்டது
இடம் கொடுத்தேன்...
நதியானது..!
/*/
பூமி
எழுந்து நிற்க வேண்டுமென்றது
எழுப்பி விட்டேன்.....
மலையானது..!
/*/
மேகத்துக்கு
தாகம் என்றது
நீர் ஊற்றினேன்....
மழையானது..!
/*/
பூமியின்
புற அழகை ரசித்துக் கொண்டே
இருட்டில் பயந்து அலறினேன்...
கனவு கலைந்தது.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (7-Feb-14, 7:43 am)
பார்வை : 532

மேலே