முதிர்கன்னிகள் உருவாக்கம்
முதிர்கன்னிகள் உருவாக்கம்??!!
வரதட்சணை கொடுக்க இயலா
வறுமைக்கடலில் தத்தளிப்போர்
வரன் தேடி ஏங்கலாமோ என்பார்...
வரதட்சணை கொடுக்க முடிந்தும்
செவ்வாய் தோஷம் கொண்டோர்
எதிர்பார்க்கலாமோ வரனை என்பார்...
செவ்வாய் தோஷம் இல்லாது போயினும்
கருத்த மேனியும் தெத்திய பல்லும்
முன்னின்று குணம் பின்னேறியோர்
வரன் தேடி ஏங்கலாமோ என்பார்...
மேனி எழில் கூடியிருந்தும்
குறைவாக கல்வி கற்றோர்
எதிர்பார்க்கலாமோ வரனை என்பார்...
படிப்பு பண அந்தஸ்து அழகு அறிவுத்திறன் என
எல்லாம் வகையாய் அமைந்திருந்தும்
பெண்ணைச் சார்ந்த சுற்றத்தினர்
குணம் அழகு தம்தகுதிக்கு ஒவ்வாததாம் என்றே
பட்டியல் பல போட்டு மணமாலைப்
பகலவனை மறைக்கின்றார்
சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை பெற்ற
மமதையில் வரன் வீட்டார்
பெண்கேட்டும் வரமாட்டார்
வந்தாலும் சிறு சிறு விசயத்தையும்
பெருங்குறையாக்கித் தட்டிக்கழித்திடுவார்
காரணி விதி என்பார்
மணமாலை சூடி இல்லறவாழ்வு
ஏற்றமாய் அமையத் தடையாகும்
விதி வில் ஒடிக்கும் இராமன் வரவு நோக்கி
வயதில் ஏற்றம் கொண்ட முதிர் கன்னிசீதைகள்
சிறுமையாய் குறுகித் தலைகுனிவது
சமூகத்தின் ஏளன நோக்கிலும்
முதிர்கன்னியெனும் குத்தல் பேச்சிலுமே
ஓ சமூகமே!
பிறரை எள்ளி நகையாடுமுன்
இதே விதி நாளை நம்பக்கமும் வரலாமெனும்
நினைவை அழுத்தமாகப் பதித்து
தோஷம் உள்ளிட்ட மூடநம்பிக்கைக்கு
மூடுவிழா செய்து பகுத்தறிவு செயலாற்றி
முதிர்கன்னி உருவாக்கத்தை
முற்றிலும் தகர்த்திடுக...!!
...நாகினி