விடுதியும் ஆங்கிலமும்

முதன் முதலாய்
என் மகன்
பள்ளிக்குப் போகையில்
அறியோனாய் வரவேண்டி
வாழ்த்தி அனுப்பினோம் ...

அடுத்த ஆண்டு
அரசுப்பள்ளி வேண்டாவென்று
ஆங்கிலப் பள்ளியில்
விடுதியின் தங்கலில்
பயில வைத்தோம்...

வெள்ளாமையில் பாதி
அவன் படிப்புக்கும்
இருப்பதில் மீதி
அவன் விடுதிக்கும்
என்றே அனுப்பினோம்...

வறுமையில் நின்றாலும்
அவன் எழுதும்
மடலில் மகிழ்ந்தோம்.
ஆங்கிலம் பேசவும்
அவன் துவங்கிவிட்டான்...

ஒருபக்கம் பெருமை
மறுபக்கம் வெறுமை ...
அவனின் பேச்சு
ஆங்கிலத்தமிழ் மொழியானது ...
இடைவெளியும் மிகுதியானது.

பள்ளி முடித்தான்
நல்ல மதிப்பெண்கள்...
பெரிய கல்லூரி
உயர்ந்த படிப்பு...
அப்பொழுதும் விடுதிதான்.

நாங்கள் பெற்றது
ஒரு பிள்ளை ...
அவனை வளர்த்தது
மாணவர் விடுதிதான்.
கல்லூரிக்காலமும் அவ்வாறே.

மாதம் ஒருமுறை
நானும் மனைவியும்
தாய் தந்தையாய்
பார்த்து மெய்மறந்தே
காசுதந்து திரும்புவோம்.

கல்லூரிக் காலத்தில்
காதலும் துளிர்த்ததுவே
படிப்பு முடிந்தது
பட்டணத்தில் வேலையோடு
அழைக்காமலே மணம்கொண்டான்.

மகன் பிரிவோடு
வாழ்ந்த நாங்கள்
அவன் முகவரியோடு
காணும் ஆவலில்
தேடிப் போனோம்.

மனைவி மகனோடு
நல்வாழ்வு வாழ்ந்தான்
அப்பொழுதும் பெருமைதான்
ஆம் அவர்களுக்குள்
பேசியது ஆங்கிலம்.

அந்நேரமும் எங்களால்
ஏதும் பேசஇயலாது
உணர்வின் வெளிப்பாடு
எங்களுள் அடங்கியது
எப்பொழுதும் போல ...

பேரனைக் கொஞ்சினோம்
ஆங்கிலத்தில் அல்ல
மழலை மொழியில் ...
அவனுக்கும் துவங்கியது
ஆங்கிலமொழி வழிக்கல்வி...

கடைசியில் நாங்கள்
ஊர் செல்கையில்
மழைதண்ணி இல்ல
கொஞ்சம் காசனுப்பு
என்று கேட்டோம்...

பதிலாய் மகனின்
மொழிதலில் உறைந்தோம்
இருவரும் வந்திடுங்கள்
முதியோர் விடுதியில்
சேர்த்து விடுகிறேன் ...

அக்கணம்தான் அறிந்தோம்
நாங்கள் அவனின்
பெற்றோர் இல்லை
விடுதியும் ஆங்கிலமும்
வளர்க்கக் கொடுத்தோம்.

- சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி (13-Feb-14, 5:25 pm)
பார்வை : 88

மேலே