கற்பிக்காத பாடங்கள்

" டிக்கெட்.. டிக்கெட்.."

கண்டக்டரின் குரல் எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது திரும்பிப் பார்த்தேன், சம்பத்! என் வகுப்பு தோழன்.!

" டேய் , சம்பத் .. நல்லாயிருக்கியா..?"

"கதிரு, நீ நல்ல இருக்கியா ? எவ்வளவு வருசம் ஆச்சுடா உன்னை பார்த்து.. "

மேலும் பேச வேண்டியிருந்தது.

" இரு.. எல்லோருக்கும் டிக்கெட் குடுத்துட்டு வந்துடுறேன்.." என்று நகர்ந்தவன் பத்து நிமிடத்தில் மொத்த பேருக்கும் டிக்கெட் கொடுத்துவிட்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். வண்டி கருங்கல்பட்டி கடந்தது.

"என்னடா சம்பத்... பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே பழைய பஸ் டிக்கெட் எல்லாம் பொறுக்கி வச்சுகிட்டுச் சுத்துவ .. இப்ப கண்டக்டாராவே ஆயிட்டியா ... ?

" நானெங்க படிச்சேன் .. கடைசியில இதான்.."

சொல்லிக்கொண்டே, "தாஜ்மஹால்.. தாஜ்மஹால்..யாரு ஏறங்குறது..?" என்று உரக்கக் குரல் கொடுத்தான்.

ஓரிருவர் இறங்கினார்கள். திரும்ப என்னருகில் வந்தமர்ந்தான்.

" டேய் ! இது கருமாதி ஸ்டாப் இல்ல..? நீ என்னவோ புதுசா 'தாஜ்மஹால்'ன்னுற.. ?"என்றேன் குழப்பத்துடன்.

"நீ சொல்லுறதது சரிதான் இது கருமாதி ஸ்டாப் தான் ஆனா, இது டவுன் இல்ல.. கிராமம். இங்குள்ள ஜனங்களெல்லாம் ரொம்ப செண்டிமெண்ட் பாப்பாங்க. காலைல பஸ்ல ஏர்றவன் ஒரு நல்லது கெட்டதுக்கு போவான். நாம் அங்க எறும்போதோ இறங்கும்போதோ 'கருமாதி.. கருமாதி..'ன்னு சொன்னா அவங்க மனசு சங்கடப்படும். அதான் நானே "தாஜ்மஹால்"ன்னு ஸ்டாப் பேர மாத்தி கூப்பிட்டு பழகிட்டேன். இப்ப இந்த வழிய போற எல்லா பஸ்லயும் " தாஜ்மஹால்"ன்னு தான் பேரு இருக்கும்..."

பேசிக்கொண்டிருக்கும்போதே என் ஊர் வந்தது சம்பத்திடம் விடை பெற்று இறங்கினேன்.

படிக்காமல் தறுதலையாய் திரிந்ததால் நல்ல உத்தியோகதிற்க்கு போகாமல் இப்படி கண்டக்டராகி விட்டான் சம்பத், எனச் சற்று முன் கேலியாக நினைத்தேனே... இவனா படிக்காதவன் ? பெரிய பல்கலைக்கழகம் ஒன்றில் மிகப்பெரிய மேலான்மைப் படிப்பு படித்து முடித்துவிட்ட கர்வத்தோடு ஊர் திரும்பும் எனக்கு அங்கே சொல்லித்தரும் ' வாடிக்கையாளாரின் திருப்தி 'யை இந்த படிக்காத நண்பன் எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டு போய்விட்டான் .!!!

நீதி : கல்லூரிகள் கற்பிக்காத பாடங்கள் அனேகம் இருக்கின்றன.

எழுதியவர் : முரளிதரன் (15-Feb-14, 5:45 pm)
பார்வை : 266

மேலே