தெம்மாங்கு - கே-எஸ்-கலை

ஆத்தங்கர ஓரத்துல அத்தமகளே - நீ
அன்னம்போல நடக்கையில செவத்தமகளே...
நெஞ்சிக்குள்ள குளிருதடி பட்டபகலே - ஒன்
நெனப்புலநா(ன்) சாகுறேண்டி அத்தமகளே ...
---ஆடுமேய்க்க வந்துபோற பெரியமச்சியே - நீ
---ஆசையால துடிக்கிறியோ பெரியமச்சியே
---ஆடிசூட்ட நெஞ்சிக்குள்ள புரியவச்சியே - இவ
---ஆசையில துடிதுடிச்சி எரியவச்சியே...
ஒத்தையில நடந்துபோற சிங்காரக்கன்னு - நீ
ஒத்தவார்த்த பேசிப்புட்டா என்னடிக்கன்னு ?
அத்தமக(ன்) தானேஇவ(ன்) சொல்லுடிகன்னு - ஏ
ஆசையநீ புரிஞ்சிக்கிட்டா என்னடிக்கன்னு...?
---நேத்திவச்சி காத்திருந்தே கருத்தமச்சியே- நீ
---நேத்துக்கூட கனவில்வந்து கூத்தடிச்சியே...
---பச்சபுள்ள நெஞ்சிக்குள்ள திரியவைக்கிற- நீ
---பத்திகிட்ட பஞ்சிப்போல எரியவைக்கிற...
ஓரப்பார்வ சூறக்காத்தா தாக்குதுபுள்ள - அந்த
கோரபுல்லும் கேலியாத்தான் பாக்குதுஎன்ன
சோறக்கூட தள்ளிவச்சி வாழுறேன்புள்ள- ஒம்
பேரதவிர வேறயேதும் நெஞ்சிலயில்ல...
---ஒன்னதவிர வேறயாரும் மனசிலில்லடா - நீ
---சொன்னதுமே சொல்லிப்புட்டா மனுசியில்லடா
---பொட்டபுள்ள மனசநீயும் புரிஞ்சிக்கொள்ளுடா-ஓ
---அத்தமக உனக்கேதா(ன்) தெரிஞ்சிக்கொள்ளுடா !
வள்ளிஒன்ன அள்ளித்தூக்க மனசுஏங்குது- ஓ
வெள்ளிக்கொலுசு சத்தத்துல உசுருபோகுது
துள்ளிக்குதிச்சி மீனுபோல மனசுஆடுது- அடி
கள்ளிஒன்ன கட்டிப்புடிக்க கையுந்துடிக்கிது !
---பக்கத்துல ஆத்தாவந்து சுள்ளிபொறுக்குவா-அவ
---பாத்துபுட்டா அப்பங்கிட்ட சொல்லிநொறுக்குவா
---பள்ளிக்கூடம் போறகாலம் முடியட்டுமாமா-ஓம்
---வள்ளிப்புள்ள வந்துருவா பொறுத்துக்க ஆமா !
புத்தியில நஞ்சவச்சிப் போறடிக்கன்னு - ஒன்
நெத்தியில பொட்டுவப்பேன் பாருடிக்கன்னு !
பத்தியமா வளந்துப்புட்ட பச்ச மண்ணு- ஒன்ன
சத்தியமா கட்டிக்குவேன் போராடிநின்னு !