என்கவுண்டர்

என் பெயர் துரை, இன்ஸ்பெக்டர் ஜாண் துரை. விழுப்புரத்தில் இருந்து மாற்று பெற்று நெல்லை வந்திருக்கிறேன். இப்பொழுது, நான் முன்னாள் எம்.எல்.ஏ ராஜரெத்தினத்தின் வலது கையாக திகழ்ந்த லோகுவை கைது செய்து கோர்ட்டுக்கு கூட்டிப் போகிறேன்.”ஏட்டய்யா அவனுக்கு டீ, கீ வாங்கி கொடுங்க பத்து மணிக்குள்ளால அவனை கோர்ட்டுல் ஒப்படைக்கணும்”.அப்படியே நானும் ஒரு டீயை உறிந்தவாறு தூரத்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் எப்படி போலீஸ் ஆனேன் என்பதில் இருந்து லோகு கைது வரை என் மனத்திரையில் ஓடியது
அப்போ நான் கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்த நேரம்….. என் நண்பர்கள் சிலர் இணைந்ததால் நானும் என்.சி.சியில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலில் கஷ்டமாக இருந்தாலும் போகப் போக ஆர்வம் ஆகிவிட்டது. என்.சி.சி என்றால் ஐம்பது சதவீதம் ராணுவம் என்பார்கள் ஆனால் எனக்கென்னவோ ராணுவ வீரன் ஆக வேண்டும் என்பதை விட போலீஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது. காக்க காக்க படத்தை மட்டும் பதினொரு தடவை பார்த்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என் அறையில் ஜாண்துரை ஐ.பி.எஸ் என்று எழுதிவைத்து, காக்க காக்க சூர்யா போலவே நானும் மீசை வைத்து கையை முறுக்கிக் கொண்டு நடந்தது என நான் செய்த எகத்தாளங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. நான் முரட்டுத்தனமானவன் என்று காண்பிப்பதற்காகவே எந்த பெண்ணையும் முறைத்தே பார்ப்பேன் (மனதில் ஆசை இருந்தாலும் கூட). ஒருவழியாக பி.காம் டிகிரியை முடித்து விட்டு வெளியே வந்தேன்.ஆனால் என் போலீஸ் ஆசை மட்டும் மனதில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
அப்போது எஸ்.ஐ தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து உடனே விண்ணப்பித்து விட்டு என்னை தேர்வுக்காக் உடலளவிலும், மனதளவிலும் தயார் செய்தேன். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக வி.ஏ.ஓ தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த என் நண்பர்கள் கதிர், அலெக்ஸ் ஆகியோருடன் இணைந்து படித்தேன். பரபரவென எழுத்துத் தேர்வு உடல் தகுதி தேர்வு எல்லாம் முடிந்தது.
மூன்று மாதங்கள் கழித்து, சலூண் கடையில் முடிவெட்டக் காத்திருக்கையில் தந்தையிடமிருந்து போன் “ஐயா! நீ எஸ்.ஐ எக்சாம் பாஸாயிட்டய்யா சீக்கிரமா வீட்டுக்கு வாய்யா” என்றார். கேட்டதும் எனக்கு சந்தோசம் தாங்க முடியல அப்படியே பறந்துகிட்டிருந்தேன்.சலூண்காரர் என்ன கட்டிங்? என்றார். காலரை தூக்கிவிட்டுக் கொண்டு ‘போலீஸ் கட்டிங்’ என்றேன்.வீட்டிற்கு சென்றவுடன் “அண்ணா இப்பவே பாதி போலீஸ் ஆயிட்டண்ணா” என்றாள் தங்கை. வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஊரில் ஒரு கெத்தோடு அலைந்து திரிந்தேன்.
ஒன்றிரண்டு மாதங்களில் டிரெய்னிங்கிற்காக சென்னைக்கு சென்றேன். அங்கே பல ஊர்களில் இருந்து என்னைப் போல் நிறையப் பேர் தேர்வாகி வந்திருந்தார்கள். முதலில் சற்று ஒதுங்கி இருந்தாலும் பிறகு நிறைய பேர் நண்பர்கள் ஆனார்கள்.அதில் முக்கியமானவன் ஆல்பர்ட். காரணம் தெரியவில்லை ஆனால் அவன் தான் எனக்கு மிக நெருக்கமான் நண்பன்.
டிரெய்னிங் முடிந்தது, அதன் பின் எனக்கு சிவகாசியில் ஸ்டேஷன் டிரெய்னிங். ஆல்பர்ட்டிற்கு குமரி மாவட்டம் தக்கலையில். நான் ஸ்டேஷன் டிரெய்னிங்கில் இருந்த போது டிராபிக் கண்ட்ரோல் செய்து கொண்டிருந்தேன் அப்போது எம்.எல்.ஏ கார் ஓட்டுநர் முண்டியடித்துக் கொண்டு செல்ல முற்பட்டான். ஐயா வர்றாருல்ல வழி விடுங்க என்று என்னை நோக்கித் திமிராய் வந்தவனுக்கு ‘பொளேர்’ என்று ஓர் அறை விட்டேன். அது ஹிந்து நாளிதள் வரை செய்தியாக வந்தது. அதுதான் என் முதல் அதிரடி.
ஸ்டேஷன் டிரெய்னிங் முடிந்த பின்பு காரைக்குடியில் போஸ்டிங். என்னுடைய முதல் என்கவுண்டர் பங்க் குமார் அடுத்தது கடப்பா ராஜூ அதற்கடுத்து வரிசையாக மூன்று. அதற்கேற்ப டிரான்ஸ்பரும் உண்டு. அதற்கப்புறம் புரமோஷன், இன்ஸ்பெக்டர்.ஜாண்துரையாக காஞ்சிபுரத்திலிருந்து விழுப்புரத்திற்கு. அங்கேயும் என் அதிரடி குறையவில்லை, மூன்று என்கவுண்டர்க்ள். என் கவுண்டர் நடக்கும் போதெல்லாம் மனித உரிமை ஆர்வலர்கள் கொடி பிடித்துக் கொண்டு வருவார்கள் நான் அவர்களுக்கு பதில் சொல்ல விரும்புவது இல்லை. ஏனென்றால் இப்படிப்பட்டவர்கள் சமூகத்தைக் கெடுக்கும் வைரஸ் மாதிரி, இவர்களை அழிப்பதில் தப்பே இல்லை.
இப்படியே போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையில் ஒரநாள் காலைச் செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் செய்தியைப் பார்த்ததும், இதுவரை எதற்காகவும் அழுது பழக்கப்படாத என் கண்கள் குளமாகின.”திருநெல்வேலியில் எஸ்.ஐ,ஆல்ப்ர்ட் மணல் மாஃபியா கும்பலால் கொலை செய்யப்பட்டார். அன்றே புறப்பட்டு திருநெல்வேலிக்குச் சென்றேன்.அவன் வீட்டிற்குச் சென்ற போது காரியங்கள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. அவனது பெற்றோருக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் கனத்த இதயத்தோடு திரும்பினேன். அப்போதே அவனுடன் பணிபுரிந்த ஏட்டிடம் நடந்தவற்றை கேட்டறிந்தேன். பின்னர் மூன்று மாதங்களில் நானே டிரான்ஸ்பர் பெற்று திருநெல்வேலிக்கு வந்தேன். அது என்னுடைய சொந்த ஊர் ஆகையால் அனைத்து இடங்களிலும் புகுந்து விசாரித்தேன். முன்பே இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சிலரையும் விசாரித்தேன். மணல் குவாரி வைத்திருந்த செல்வத்திடம் விசாரித்த போது துப்பு துலங்க ஆரம்பித்தது. செல்வன் எம்.எல்.ஏ ராஜரெத்தினத்தின் பினாமி. ஆல்பர்ட் திருநெல்வேலி வந்ததும் மணல் மாஃபியாவை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த எம்.எல்.ஏ அவனை ஒழித்துக் கட்டும் பொறுப்பை லோகுவிடம் ஒப்படைத்தான்.ஓர் நாள் தனி ஆளாக மணல் அள்ளும் கும்பலை துரத்த முயன்ற போது திட்டமிட்டபடி ஆல்பர்ட்டை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.
இப்போது, தகுந்த ஆதாரங்களோடு எம்.எல்.ஏ வலது கை லோகுவை கைது செய்தாயிற்று. ஊருக்கு வெளியே வந்து டீ சாப்பிடலாம் என்று தோன்றிய போது ஜீப்பை விட்டு இறங்கி டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன்………
அப்போது , என் நண்பனைக் கொன்ற லோகு சிரித்துக் கொண்டே,”யோவ் போலீஸ் உன்னால என்னை என்ன பண்ண முடியும் நான் எப்படியும் வெளியெ வந்திடுவேன்” என்றான்.நான் அவனைப் பார்த்து புன்னகைத்தேன். சற்று நேரத்தில், ஜீப் கிளம்பியது, ஆளில்லாத ஒரு காடு அருகே நின்றது. நான் முதலில் இறங்கினேன். அவனையும் இறங்கச் சொன்னேன். ஏட்டையா துப்பாக்கியை எடுத்து அவனை நோக்கி நீட்டினேன். டுமீல்… சுட்டே விட்டேன் அவனை அல்ல என்னை ஆம்! என் கையில் சுட்டுவிட்டேன். நடக்கப்போவதை புரிந்து கொண்டவன் ஓட ஆரம்பித்தான். இப்போது என் துப்பாக்கியை எடுத்தேன் சரியாக அவன் ஒரு மணல் திட்டில் ஏறிய போது வெறி கொண்டு சீறிப்பாய்ந்த என் துப்பாக்கிக் குண்டு அவன் தலையைத் துளைத்து மணலில் ரத்தக் கோடிட்டது. ஏட்டையா துப்பாக்கி இப்போது அவன் கரங்களுக்கு மாறியது.
மறுநாள், தினத்தந்தியில் ,” இன்ஸ்பெக்டரைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற கைதி என்கவுண்டரில் கொல்லப்பட்டான்” கையில் கட்டோடு அதை வாசித்து ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்தேன்…. என்கவுண்டர்கள் தொடரும்

எழுதியவர் : .நிக்கல்சன் (26-Feb-14, 11:58 am)
சேர்த்தது : நிக்கல்சன்
பார்வை : 159

மேலே