மரண வாசல் பகுதி 6

தற்போது :

தனிஷா பெண்கள் கழிவறையில் கதவைச் சாத்திக் கொண்டு சுவரோரம் சாய்ந்திருந்தாள். அனைவருக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்தில் தைரியம் சொல்லி நிச்சயம் பத்திரமாய் நாடுத் திரும்புவோம் என்ற அவளது மனத்திடத்தை நினைத்து தன்னைத் தானே பெருமைக் கொண்டாள். சில நொடிகள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை அவளால்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென கொட்டியது. சுவரோரம் நின்றிருந்தவள் அப்படியே திரும்பி சுவற்றில் தலை ஒட்டி நின்றவாறே அழுதாள். விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் அவள் தாயிடம் தர்க்கம் பண்ணிவிட்டுத்தான் வந்துச் சேர்ந்தாள் தனிஷா.

அடியே ! நில்லுடி காலுல சுடுத்தண்ணி ஊத்தன மாதிரி ஏன் இப்படி பறக்கற ? இருடி ! சமைச்சிட்டேன் ! சாப்ட்டுட்டு போயேன் !

மா... போ மா ! உனக்கு இதே வேலைத்தான் ! எத்தனைத் தடவ சொல்றது நான் கிளம்பற நேரமா பார்த்து சமைச்சி என்ன சாப்பிடச் சொல்லி சாகடிக்காதனு ! சொன்னாக் கேட்க மாட்டியா நீ ?!

ஏண்டி சளிசிக்கற ?! வரதே ரெண்டு வாரத்துக்கு ஒருத் தடவ வீட்டுக்கு ! அதுலையும் வந்தா வீட்டுல தங்கறதே இல்லே ! காலுல பம்பரத்தக் கட்டிக்கிட்டு அங்கையும் இங்கையும் ஓடிறது ! அப்பறம் நான் கிளம்பறேன்னு பொட்டிப் படிக்கைய தூக்கிக் கிட்டு கிளம்பறது ! என்னடி நியாயம் இது ? நான் ஒருத்தி இங்கே இருக்கறதே உனக்காகத் தாண்டி ! பெத்து வளத்த இந்த அம்மாக்கூட ஒரு அஞ்சு நிமிஷம் ஒக்காந்து பேசக் கூட உனக்கு நேரமில்லைப் பாரு !

மா ! பிளிஸ் மா ! உனக்கு இப்ப என்ன ? நான் நீ சமைச்சதை சாப்டனும் அவ்வளோதானே ?! வந்து சாப்டறேன் ! இரு ! அதுக்கு ஏன் கண்டதையும் பேசற ? போ மா ! நீ சரியான லூசு !

ஆமாடி நான் லூசு தான் ! பெத்த அஞ்சில நாலு நல்ல வேலையில கை நெறைய சம்பளத்துல பக்கத்துலையே இருக்கு ! இருந்தும் அஞ்சாவது நீ மட்டும் உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி சுத்தற ! நான் தினம் தினம் கடவுள் கிட்ட உனக்கு எதுவும் ஆகாமே இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேண்டி ! ஒரு நேரம் போல இருக்காது தனிஷா. உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா இந்த வீடே ரெண்டாகிப் போகும் ! உங்க பெரிய அண்ணன் அஜய் கே.எல்.ஆய்.எ வே கொழுத்திடுவான் ! தெரியும்லே !

ஐயோ ! மா ... பேசாமே பாரிமாறு ! அறுக்காது ! நீ பாரு உன்னாலையே நான் காணப் போகப் போறேன் ! இப்போ போறேன்லே பாரு அப்படியே காணப் போகப் போறேன் !

வாயிலையே போட்டேன்னா தெரியும் ! கரு நாக்குக் காரி !

நாகம்மா மன்னிசிரும்மா ! தெரியாமே விளையாட்ட சொல்லிட்டா உன் புள்ளே !

அம்மாவிடம் விளையாட்டாய் சொன்ன விஷயம் இப்போது நிஜமாகி விட்டதே ! விஷயம் தெரிந்தால் நெஞ்சு வெடித்தே எனக்கு முன் அவள் போய் விடுவாளே ! ஐயோ ! நினைக்க நினைக்க நெஞ்சுக் குழி தொண்டையை அடைத்தது.

எழுதியவர் : தீப்சந்தினி (17-Mar-14, 2:57 pm)
பார்வை : 158

மேலே