அப்புவின் சந்தேகம் ஸ்கொலல்

அப்புவின் சந்தேகம் .. தொடர் கதை

"ஸ்கொலல்"

அன்று சனிக்கிழமை.

காலை நேரம். ஒன்பது மணியளவில் அப்புவின் தந்தை அலுவலகம் சென்று விடவும், அப்பு ஜன்னல் அருகில் நின்று கொண்டு, "தாத்தா .. தாத்..தூ" என்று குரல் கொடுத்தான்.

கடந்த ஆறு மாதமாக அப்பு திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு ப்ளே ஸ்கூல் சென்று வருகிறான். சனிக்கிழமை ஆகையால் அன்று ஸ்கூல் இல்லை.

அப்புவின் வீடும் தாத்தாவின் வீடும் எதிரெதிராக இருந்தன. ஆகையால் கட்டில் மீது அமர்ந்திருந்து டீ.வீ. யில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்த தாத்தா அப்புவைப் பார்த்து,

என்னடா செல்லம் ?

என்ன செய்றீங்க

டீ.வீ.ல நியூஸ் பாக்கறேன்.

நான் டிபன் சாப்டுட்டு வரேன்

சரிடா செல்லம். ஆமாம் .. இன்னிக்கு சனிக்கிழமை ஆச்சே. நீ தான் நான் கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு சொல்லுவியே.

எங்க அப்பா ஆபீசு இருக்குன்னு போயிட்டாரு.

ஓ .. அப்படியா சமாசாரம். சரி என்ன டிபன் ?.

தோசை

தாத்தா இன்னும் டிபன் சாப்படல்லை. வரும் போது ரெண்டு தோசை எடுத்துட்டு வா

ஊஹூம் .. நீங்க தான் காலைல டிபன் சாப்பிட மாட்டீங்கன்னு அம்மா கிட்ட சொல்லியிருக்கீங்களே .. அது பொய்யா

இல்லேடா என் செல்லமே .. தோசையை உன் தாத்தா அம்மா சாப்பிடுவாங்க.

அப்போ தோசை வேணும்ன்னு தாத்தா அம்மா சொல்லட்டும். ஏன் தாத்தா பாட்டிக்கு வேண்டாமா தோசை

தாத்தா அம்மாவும் பாட்டியும் டிபன் சாப்டாச்சு.

அப்ப சரி. தாத்தா அம்மாகிட்ட சொல்லி எனக்கு ஜூசு எடுத்து வைக்கச்சொல்லுங்க .. நான் வாரேன்.

சற்று நேரத்திற்குப்பின், அப்பு வந்து வழக்கம் போல் தாத்தா அமர்ந்திருக்கும் கட்டிலில் மீதேறி அமர்ந்து கொண்டு,

தாத்தாம்மா பெட்ல ஷீட்டு மாத்திட்டாங்களா என்று சொல்லி புதிய அந்த விரிப்பை தன் இரு கைகளால் தடவிக் கொண்டே,

தாத்தா .. ஸ்கொளல் என்றான்

என்னது

ஸ்கொளல் .. ஸ்கொளல் என்று மீண்டும் சொல்லியும் தாத்தாவிற்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை

என்ன சொல்றே நீ .. எனக்கு புரியல்ல.

என்ன தாத்தா .. இதா பாருங்க ஸ்கொளல் ன்னு சொல்லி அவன் பிஞ்சுக் கரத்தினால் கட்டில் மீது விரித்திருந்த பெட் ஷீட்டில் இருந்த சதுர வடிவத்தைச் சுட்டிக் காட்டினான்.

ஓ .. இதுவா .. இதுக்கு என்ன பேரு சொன்ன .. இன்னொரு தடவை சொல்லு

அப்பு மிக்க சந்தோஷத்துடன், ஸ்கொளல் என்றான்.

இது ஸ்கொளல் ன்னு யாரு சொன்னாங்க

ப்ளே ஸ்கூல் டீச்சர்

சபாஷ் டா என் செல்லமே .. சின்ன பிள்ளைக்கு எல்லாம் இது ஸ்கொளல் தாண்டா என்று சொல்லி தாத்தா அவனைக் கட்டிப்பிடித்து இரு கன்னங்களிலும் முத்தம் கொடுக்க, அவனும் தாத்தாவிற்கு முத்தம் கொடுத்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டே தாத்தாம்மா பெரிய கிளாசில் ஜூசு கொண்டு வந்து கொடுக்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை பருகினான்.

"குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்"

எழுதியவர் : (17-Mar-14, 2:28 pm)
பார்வை : 111

மேலே