சென்னையில் ஒரு நாள் - மகளிர் மட்டும்

அதிகாலை கண்விழித்து நெடுந்தூர பயணத்திற்கு ஆயத்தமானேன்.அழகாய் சன்னலோரம் அமர்ந்து அழகான இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தேன். இதுவரை இனிமையான பயணம்தான். இறங்க வேண்டிய இடம் வந்தது அதுதான் சிங்கார சென்னை. இதுதான் முதல்முறை சென்னை பயணம். அருகிலுள்ள கல்லூரிக்கு செல்ல வேண்டும் என பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கிடைத்தது அந்த அழகியின் தரிசனம். அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு.

”அழகோ அழகு அவள் கண்ணழகு..
அவள் போல் இல்லை ஒரு பேரழகு..”

என்ற பாடல் வரிகள் நிச்சயம் அவளுக்கு பொருந்தும்.

அவளை நாள் முழுக்க ரசித்து கொண்டே இருக்கலாம் போல என்று எண்ணும் வேளையில் போக வேண்டிய பேருந்து வந்தது. அவளைவிட்டு போக மனமில்லாமல் ஏறினேன். பயணிகள் யாருமில்லாமல் பரிதவித்த பேருந்தில் பிடித்த மாதிரி ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.

அப்போதுதான் நடக்கத் தொடங்கியது அந்த ஆனந்த அதிர்ச்சி…முன்னிருக்கையில் பார்த்தால் அவளேதான் ஒரு… ஒரு… ஆணோடு… அமர்ந்து இல்லை தனியாகத்தான் இருந்தாள். என் மனதில் ஆனந்தம் பீறிட்டது “உனக்கான ஒருத்தி கிடைத்துவிட்டாள்” என்று..

அவளை எப்படியாவது காதலியாக்கி விட வேண்டும் என எண்ணுகையில், அவள் என்னைப் பார்த்து புன்னகை பூத்தாள். “மச்சி கட்டாயம அந்த பொண்ணு எனக்குதான்டா..!” என்று யாரிடமாவது சொல்ல தோன்றியது.

மீண்டும் அவள் சிரிக்கையில், ”நமக்குத்தான் கல்யாண ராசியே இல்லை” என ஜோசியர் கூறியது நினைவுக்கு வந்தது. அவள் மீண்டும் மீண்டும் புன்னகை புரிவதைப் பார்த்ததும், கண்டபடி கெட்ட வார்த்தைகளில் “யாருக்குடா ராசியில்லை” என ஏகபோகமாய் அந்த ஜோசியரை திட்டி தீர்த்தேன். ஊருக்கு சென்றதும், ஜோசியரை உதைக்க வேண்டுமென்று தோன்றியது.

கடைசியாய்,இறங்க வேண்டிய இடம் வந்தது. அவளும் என்னைப் பார்த்து சிரித்து கொண்டே இறங்கினாள். நானும் அவளை ரசித்தவாறே இறங்கினேன். வழக்கம்போல, அவள் முன்னே செல்ல, ஆணாய் பிறந்து வீணாய் போன நானும் பின்னே பின்தொடர்த்தேன். அவளிடம் பேச வேண்டுமென நினைத்த நேரத்தில், அதிஷ்டம் அடித்தது எனக்கு. அவளே என்னருகில் வந்தாள்.அந்த நேரம் பார்த்து கல்லூரி பேருந்து வந்ததும் அதில் ஏறி, இருவரும் அருகருகில் அமர்ந்தோம். அவள் என்னிடம் பேச முற்பட்டாள்

அவள்:ஹாய்…!
நான்: ஹாய்..!
அவள்: சென்னைக்கு புதுசா..?
நான்: ஆமாம்,எப்படி கண்டுப்புடிச்சிங்க..!
அவள்: அதுவா.. நீங்க அந்த பஸ்ல என் பின்னாடி உக்கார்ந்து வரும்போதே தெரிஞ்சிக்கிட்ட.
நான்: (மனதில் குழப்பத்தோடு) அதான் எப்படினு கேட்ட.

எதுவும் சொல்லாமல் எதையோ கை நீட்டி காண்பித்துவிட்டு, என்னைவிட்டு இறங்கிச் சென்றாள்.என்ன காண்பித்தாள் என படித்து பார்த்ததும்,புரிந்தது அவள் எதற்காக சிரித்தால் என்று…

அவள் கை நீட்டி காண்பித்தது “மகளிர் மட்டும்” என்ற வாசகத்தை..

“மவனே.. உனக்கு இந்த ஜென்மமில்ல ஏழேழு ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காதுடா” என்றது என் மனம்.

நீதி:
“இருக்கை மாறி அமர்ந்தால், பேருந்தில்
இருப்பவர் எல்லாரும் சிரிக்கத்தானே செய்வார்கள்”

எழுதியவர் : செல்ரா (16-Mar-14, 7:25 pm)
பார்வை : 267

மேலே