மானுட தெய்வம் மாதரி

#மானுட தெய்வம் மாதரி

விதியின் சீற்றம் புயலைப் போன்றே
சுழன்றடித்தது கோவலன் வாழ்வில்
விரட்டியும் அடித்தது வீதி வீதியாய்
புரட்டிப்போட்டது மரணம் வரையில்..!

ஆய்ந்தறியா விற்பனை வழக்கில்
அநி யாயத்தீர்ப்பு கோவலனுக்கு
கள்வன் என்ற குற்றச்சாட்டில்
மரண தண்டனை மாய்த்தது உயிரை..!

விதியை சபித்தாள் வெறுப்பில் கண்ணகி
வெகுண்டு எழுந்தாள் பேரலைப் போன்றே
மாணிக்கப் பரலென் காற் சதங்கை
மெய்ப் பித்தப்பின்னுயிர் மீட்கவா இயலும்..?

கட்டிய கணவன் மாண்ட சேதியில்
முட்டியழுதாள் முகம்கண் சிவந்தாள்
கடுஞ்சினம் கொண்டாள் காளியுமானாள்
கோவலன் பிரிவில் மதுரையை எரித்தாள்..!

அடைக்கலம் அளித்தவள் ஆயர் மாதரி
அறிந்தாள் சேதியை அலறியே துடித்தாள்
அனலிடை சிக்கிய புழுவாய் ஆனாள்
அமிலம் எரிக்கும் உடலாய் நெளிந்தாள்..!

அய்யகோ என்றாள் அழுதாள் புரண்டாள்
அடித்துக் கொண்டாள் தன்னையவளே
மார்பில் அறைந்தாள் முகத்தில் அறைந்தாள்
கார்முகில் கரையும் கண்களும் ஆனாள்..!

விழிகள் சிவக்க வேதனை அரற்றல்
வீதி சென்றோரை கலங்கிட வைத்தே
பித்துப் பிடித்தவள் போலவள் பிதற்ற
பேரன்பும் அதிலே பட்டுத் தெறிக்க..!

"கோட்டை இடிந்து சரிந்தது போலே
கோவில் மணிகள் அறுந்தன போலே
ஆவினங்கள் மடிந்தன போலே
கனவினில் கண்டேன் காரிருள் சூழ..!

ஐயோ கொடுமை நிகழ்ந்தே போனது
அடைக்கலம் வந்தார் கொலைக்களம் கண்டார்
ஆரிடம் உரைப்பேன் அநியாயத்தை" - மாதரி
கதறிய கதறலில் கிளிகுயில் அழுதன..!

"தும்பிக்கை என்றே என்னை நினைத்தார்
நம்பிக்கை துரோகம் நானா செய்தேன்
காத்தல் மறந்து பிழை செய்தேனோ
கண்ணகிக்கு பதில்நான் என் சொல்வேனோ..?

காக்க மறந்தது என் பிழை என்றால்
தூக்கிப் போயேன் கூற்றுவா என்னை
மாற்று உயிராய் என்னை எடுப்பாய்
கோவலன் உயிரை மீட்டுக் கொடுப்பாய்..!"

மாதரி அழுகை மரண ஓலம்
கூற்றுவன் செவிக்கு எட்டுமா என்ன..?
குவித்த விறகினில் தீயினை மூட்டி
குதித்தாள் பாவி.. மரித்தாள் உயிரை..!

#சொ .சாந்தி

(கவியுலகப் பூஞ்சோலை குழுமத்திற்காக எழுதிய கவிதை. குழுமதாருக்கும், எழுத பணித்த சகோதரர் திரு வள்ளி முத்து அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏)

எழுதியவர் : சொ.சாந்தி (28-May-25, 10:08 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 24

மேலே