தகவல் தொழில் நுட்பம்

என்
பள்ளிப் பருவத்தில்
பேருந்தில் ஏற்றிவிட்டு
விடுதிக்குச் சென்றவுடன்
கடிதம் போடு என சொல்லி
அம்மா வழியனுப்ப
நான் போடும் கடிதம்
நான்கு நாள் கழித்து
வந்தாலும்-அதுவரை
நல்ல முறையில் நான்
வந்து சேர்ந்தேன் என்றே
நம்பிக்கையுடன் தான் இருப்பார்!
கல்லூரிப் பருவத்தில்
காததூரம் நடந்து சென்று
பொதுத் தொலைபேசியில்
அம்மாவின் அலுவலக எண்ணை அழைத்தால்
ஐந்து நிமிடம் கழித்து பேசும்மா
அழைக்கிறேன் அவர்களை என்பார்கள்
ஐந்து நிமிடம் காத்திருந்து மீண்டும்
அழைத்துப் பேசி
நல்ல முறையில் வந்து சேர்ந்தேன்
என்பதை இரண்டு நாள்
கழித்து உறுதிப்படுத்துவேன்!
இன்றோ!
ஆளாளுக்கு ஒரு அலைபேசி
அம்மாவுக்கு ஒன்று
அப்பாவுக்கு ஒன்று
தங்கைக்கு ஒன்று என
ஊர்போய் திரும்புகையில்
பேருந்துப் பயணத்தில் நான் இருந்தாலும்
என்னம்மா திண்டிவனம் வந்தாச்சா?
தாம்பரம் வந்தாச்சா? என்று
வீடு வந்து சேரும் வரை
என்னுடனே பயணிப்பார் அம்மா மனதளவில்!
உடனுக்குடன் தகவல்களைப் பரிமாற
உலகத்தைச் சுருக்கி
உள்ளங்கையில் வைத்தது இன்றையத்
தகவல் தொழில்நுட்பம்!