நீர்க்கதவு

ஒரு கால்நூற்றாண்டுக்கு முன்பு
அது ஒரு கடல் நகரம்
ஒரு முதுபெரும் பிரளயத்தின் பின்பு
இரு கால் கொடு மிருகங்கள் உட்புகுந்து
பீதிகளை சனங்களின்
முகமெங்கிலும் உமிழ்ந்தன !

அனைவரும் கதறி அழுதார்கள் , வீரிட்டார்கள்
தடுப்புச் சுவர்களை வெறியுடன் பிராண்டி
காவல் காத்த கடவுளர்களை
பலியிட்டன மிருகங்கள் ...

அன்றிரவு தூங்கியவர்கள் யாருமே
மறுநாள் உயிருடனில்லை -
பக்கத்து நகரத்து மனிதர்கள்
நீர்க்கதவின் பின்னிருந்து
உற்று நோக்கினார்கள் ...
நடந்ததை விவாதித்தார்கள்
கொஞ்சம் கலங்கினார்கள்
பின்னர் எவருமறியாவண்ணம்
கலைந்து சென்றார்கள் ...

பின்பு கூடினார்கள்
பலியிடல்கள் நடந்து கொண்டிருந்தன !
குருதிக் கறையை சுத்திகரிக்கும்
மருத்துவமனை செவிலியர் போல்
ஒரு குல ஒழிப்பின் நிர்வாணத்தை
கழுவித் துடைத்தாரகள் -
ரத்த வாடையடிக்காமலிருக்க
மணம் தரும் எதை எதையோ தெளித்தார்கள் !

அவர்கள் யாரும் அழவில்லை..
குரல்களைத் தாழ்த்தி
குசு குசுவென பேசிக்கொண்டார்கள்
அந்நகர சனங்களின் புலம்பல்கள
அவர்களின் செவியேறவில்லை
இச் சம்பவங்களின் பழி அவர்களின்
ஆதிப் படிமங்களின் மேல்
பட்டுவிடக் கூடாது எனப் பாதுகாப்பதில்
அதி அக்கறையோடிருந்தார்கள் -
எதிரிகளின் மிருகத் தாக்குதல்கள்
அதிகரித்தபடியே இருந்தது ...

துரோகிகள் பிறவி நஞ்சுக் கொடியின்
பின்னால் சுருண்டு கொண்டனர் ...
அவர்கள்
குரூபியின் பிச்சைப் பாத்திரத்தில்
காசு திருடிய குற்றத்தை
மறைக்கும் குரூரத்துடன்
அலைபாய்ந்து அவதியுற்றனர் ...

எல்லா இரவுகளிலும்
சுவர் கோழியின் சத்தங்களினூடே
சனங்களின் விசும்பல்கள்
தொடந்தபடியே இருந்தன ...

இருளில் விவாதித்தவர்களுக்கு
பகலில் பொய்யாய் பொருள் பகர்ந்தார்கள் -
ஏதேதோ வாசித்தார்கள் ...
கைச்சாந்திடார்கள் ..
சனங்களின் ஊர்வலத்தில்
சமபங்களிப்பென
பிரேதங்களை சிலுவையில் அறைந்தார்கள் ...
நன்றி பகர வேண்டுமென கோருகிறார்கள் ...
பிரேதங்களின் உதடுகள்
நன்றி சொல்கின்றன -
அவர்கள் உவப்படைந்து கொள்கிறார்கள் ...
கருணைமிகு கடவுளர்களும்
இன்றளவும்
இனம்தின்னி அரக்கர்களின்
தலையினைத் தடவி
ஆசீர்வதித்தபடியே இருக்கிறார்கள் .

எழுதியவர் : பாலா (28-Apr-14, 1:00 pm)
Tanglish : neerththadam
பார்வை : 105

புதிய படைப்புகள்

மேலே