சிறப்புக் கவிதை 16 - இரயில் தேநீர் - குமார் பாலகிருஷ்ணன்
இரயில் பயணங்கள் எப்போதுமே ஒரு சுகானுபவம்தான். அது இரு நிமிடமோ அல்லது இரண்டு நாட்களோ, ஒரு குழந்தையின் குதூகலத்தை அந்த தடக்,தடக் ஓசை நம்முள் நிரப்பிவிட்டுச் சென்று விடும்.எந்தவொரு இரயில் பயணமும், தேநீரில்லாது முழுமையடைவதில்லை.
அதிகாலை குளிர்காற்றை பெட்டியெங்கும் தவழவிட்டு, ரயில் நம்மை தட்டி எழுப்பியவுடன், தானாகவே நம் கண்கள் தேடுவது தேநீரைத்தான். நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோரின் எண்ணிக்கை மட்டுமே, தேநீருடன் தனது நாளை துவங்குபவர்களை விட அதிகமாக இருக்குமெனும் அளவிற்கு நம்முடன் கலந்து விட்ட தேநீரை, சமத்துவத்தின் சின்னமாக சிந்தித்த வகையிலேயே இக்கவிதை தனித்துவம் பெறுகிறது.
"அருணோதய ஆரோகனத்தில்
வைகறைத் தீண்டலில்
வசீகரம் வீங்கி
ஆயிரம் மைல்களை அலாவி
அம்மாஞ்சியாய் வந்து கொண்டிருந்தது
ஓர் இரயில்… "
வசீகரிக்கும் வார்த்தைகள் கொண்ட இந்த ஆரம்ப வரிகளிலேயே, வசிக்கும் அறையை மறந்து, அந்த அம்மாஞ்சி ரயிலுக்குள் நாமும் பயணிகளாகிறோம். "யவ்வனம் கொஞ்சும் பொன்னிறம், வெண்பகலில் நண்பகலின் கதகதப்"பென்று, வாசிப்பவர்களுக்கே நாவூறச் செய்யும் வருணிப்புகள் தாங்கும் தேநீரை, பார்ப்பவர்களால் தட்டிக்கழிக்க முடியுமா என்ன?
எப்படி பெயருக்கு கண்விழித்து, மனதளவில் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களை, தேநீர் தட்டியெழுப்புமோ, அதுபோல அடுத்தடுத்த வரிகளில் தன் தடத்தை மாற்றுகிறது இக்கவிதை. ஒரு குழந்தையின் ஓர் இறை வழிபாட்டில் தொடங்கும் இந்தத் தேநீரின் பயணம், மனிதர்களின் பன்முகங்களை படம் பிடித்து போகிறது.
வர்க்க பேதம், இன பேதம், மொழி பேதம், பற்று பேதம், நிற பேதம் என பற்பல பேதங்களில் தன்னை பிணைத்துக்கொண்டு , வேறுபட்டு நிற்பதில் மட்டுமே ஒற்றுமை காணும் அனைவருள்ளும் தனது வெப்பத்தை சரிசமமாக வியாபிக்கிறது இத்தேநீர்.
ஒரு சலுகைப் பயணி,
ஒரு சிறப்புப் பயணி.
.
.
ஒரு தொழிலாளி,
ஒரு முன்னாள் தொழிலாளி.
.
.
ஓர் அதிகாரி,
ஓர் உண்மை அதிகாரி.
.
.
ஓர் உண்மை,
ஒரு பொய்..
இவ்வாறு ஒரு, ஓர், ஒரு, ஓர், என்று அவரவர் அடையாளங்களை மட்டுமே வரிசைப்படுத்தி, அதன் மூலமாகவே வேறுபாடுகளின் அகலங்களை விவரிக்கும் கவிஞர், சமத்துவத்தின் அடையாளத்தை நாம் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை தெள்ளத்தெளிவாக வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.
சக இந்தியன் எனது சகோதரன் என்று சுதந்திர நாளில் மார்தட்டும் கைகள், அவன் தாகத்துக்கு தண்ணீர் தரக்கூட நீள்வதில்லை. தன் பசி தீர்க்க, சேற்றில் இறங்கும் கால்களுக்கு, தன் தெருப்பக்கம் செருப்பணிய அனுமதியில்லை. எல்லோரையும் தாக்கக்கூடிய நோய்களுக்கான மருத்துவம், உள்ளோருக்கு மட்டுமான உயரத்தில் இருக்கிறது. கோடிகளைத் தின்று செரித்த ஏப்பவாய், 29ரூபாய் வைத்திருப்பவன் ஏழையல்ல என்கிறது. சுயநலம் சிரசிலே, சமத்துவம் சாக்கடையிலே.
வேற்றுமையில் ஒற்றுமையெனும் விழுமியத்தை மட்டைப்பந்தாட்ட நாட்களிலும் , மதுக்கடையிலும் மட்டுமே கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் போலி சமத்துவவாதிகளாய் மாறி விட்டோம். அன்றியும், புத்துணர்வளிக்கும் தன் கடமையை எவ்வித பேதமுமின்றி நிறைவேற்றி, அடுத்த ரயில் பெட்டிக்காய் காத்திருக்கும் அந்தத் தேநீரைப் போல, அடுத்த மதுபுட்டிக்காகவும், மட்டைப்பந்தாட்டத்துக்காகவும் காத்திருக்கிறது சமத்துவம்.
“எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்,
எல்லோரும் இந்திய மக்கள்.
எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை,
எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
என்ற பாரதியின் பாடல், அவருடைய பல பாடல்களைப் போல, வெறும் பாடலாகவே இன்றுவரை இருக்கிறது.
ஒரு புகைவண்டியை நாடாகவும், அதன் பயணிகளை பிரஜைகளாகவும் உருவகித்து, வேறுபாடுகளை உணர்த்தி, ரயிலைப் போன்றே அழகாக ஆரம்பித்து அதிவேகம் எடுக்கும் நடையில் , கருத்துக்கும் சிதைவின்றி, கவித்துவத்திற்கும் குறைவின்றி அளித்த வகையில் இக்கவிதை சிறப்புப் பெறுகிறது. வாழ்த்துக்கள் குமார் பாலகிருஷ்ணன் அவர்களே!!.
கவிதை எண் - 174234