கடவுளின் நிழல்கள்

ஜன்னல் குருவிக்கு
மட்டுமே தெரியும்
எனது அதிகாலை
எத்தனை அழகு

தன்னந் தனிமையில்
தனிமையில் லயி்க்கும்
ஏரிக்கு மட்டுமே
தெரியுமென் சலனம்

எனக்குப் புரியும்
மலரின் நாதம்
மலரும் அறியுமென்
மனசின் வேதம்

அலைகள் இசைக்கும்
பிரபஞ்ச கீதம்
காட்டு நதியின்
பாத சுரங்கள்
பாறைகள் பேசும்
தியான மொழிகள்
வானம் சிமிட்டும்
நட்சத்திர விழிகள்


தேவதைகள் பாடும்
நிசப்த இரவுகள்
நிசப்த இரவின்
நீலக் கனவுகள்
காற்றில் விரியும்
மகரந்த சிறகுகள்
வசந்தம் பாடி
உதிரும் சருகுகள்

இன்னும் இன்னும்
எத்தனை எத்தனை
கண்ணில் விரிய
கண்ணில் விரிய
எம்மை தொடரும்
இறைவனின் நிழல்கள்
சின்ன மனசுக்குள்
சிக்கிடும் பொழுது….

மனசுக்கு மட்டுமே தெரியும்
நான் எத்தனை அழகு...!

எழுதியவர் : கவித்தாசபாபதி (13-May-14, 8:22 pm)
Tanglish : kadavulin nizhalkal
பார்வை : 85

மேலே