குங்கும கனவுகள்
குறிஞ்சிப்பூக்கள் பூத்ததொரு
பொன்வசந்த வருடத்தில்
தாவணி வனத்திற்குள்
அவளே ஒரு வசந்தமாகி
வந்தாள்.
ஆயிரம் நிலவுகளின்
இளவரசி
நட்சத்திரங்களை விழிகளில் சூடிய
கலையரசி
வானவில் வீதியில்
அவள் கனவுகள் நடக்கும்
அவள் முகம் பார்த்து
வைகறை சிரிக்கும்
ஆகாயக் கிளைகளில்
பொன்னூஞ்சல் கட்டிவைத்தாள்
ஆசைகளை
மூட்டைகள் போல் அட்டிவைத்தாள்
சந்திர இழைகளில்
மன அலங்காரங்கள்
செய்துவைத்தாள் - ஒரு
மல்லிகைத் தோட்டம்
விலைக்கு வேண்டுமென்று
சொல்லி வைத்தாள்..!
ராத்திரித் தேரில்
தேவதைகளை வரவழைத்தாள்
சொப்பனத்தீவில் அவைகளுக்கு
தினந்தோறும் விழா எடுத்தாள்
பருவ கர்வமே
பொன் கிரீடம் ஆனது
புருவ வில்லோ
கர்வத்தைக் காத்தது
அவள்
அழகு ராஜ்ஜியத்தின்
அரசிளங்குமரி...!
***
பூமி பதினொரு முறை
சுற்றி வந்தது
குறிஞ்சிப்பூக்கள் பூத்ததொரு
பொன்வசந்த வருடம்
மீண்டும் வந்தது.
நிஜத்தின் மன வெளியில்
கனவு மீன்கள்
நெஞ்சமெனும் வாணலியில்
உணர்வின் பூக்கள்
அவள் கண்களின் ஆழங்களில்
யாரோ
கண்ணீர் விழுதுகளை
இறக்கி வைத்தார்;
சொப்பனத் தீவுக்குத்
தீ வைத்தார்..!
***
இங்கு
சமூக அலங்காரங்கள்
ஒரு பேச்சுக்காக
அலங்கரிக்கப்படுகின்றன.
வாழ்க்கை இங்கே
வியாபாரமாகிவிடும்போது
வசந்தங்களே ரோஜாக்களை
மிதித்துவிடுகின்றன.
***
அதோ,
சேலைச் சோலையின்
நிழல் கூட சுட்டெரிக்க
கன்னப் பரப்பில்
உடைந்த கனவுகள்
பட்டுத்தெறிக்க...
ஆயிரம் நிலவுகளை
பறித்து எறிந்துவிட்டு
கல்யாணக் கோயில் வாசலில்
கர்வத்தை அவள்
கால் செருப்பாக
கழற்றி வைக்க,
இன்னொரு பொன்வசந்தத்தில்
மீண்டும் பூத்து வருவோம் என்று
அவளை நகைத்தபடியே
ஒவ்வொன்றாய் உதிர்கின்றன
குறிஞ்சிப்பூக்கள்...! (1994)
(*குறிஞ்சிப்பூக்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும்)
(தரையில் இறங்கும் தேவதைகள் நூலிலிருந்து)