இறுதி கட்டத்தில்

புஞ்சைக் காட்டில்
குழிதோண்டி
புதைத்து விட்டால்
கல்லறைகட்டி
கும்பிடலாமென
மூத்தவன் சொன்னான் !!

இடுகாட்டில் சிதைமூட்டி
சந்தனக் கட்டை
துண்டிரண்டு போட்டு
நெய்யூற்றி
எரித்து விடலாமென
அடுத்தவன் சொன்னான் !!

இக்காலத்தில் ஏனிப்படி ?
மின்மயானத்தில்
தகனம் செய்தால்
அஸ்தியை வாங்கி
அலைகடலில் கரைக்கலாமென .
இளையவன் சொன்னான் ....!!

குடிமகன் வந்து
சங்கு ஊதினால் போதுமென
ஒருவன் சொல்ல .....
வாழ்ந்து இறந்தவர்தானே
கல்யாணச் சாவு ...
கொட்டு கொட்டி
வேட்டு வெடிச்சி
தடபுடலா வழியனுப்புவோமென
மற்றவன் சொன்னான் !!

செத்து சாத்திவைக்கப்பட்ட நிலையிலும்
அம்மாவுக்கு வந்தது சிரிப்பு !!

உயிரோடு இருக்கும்வரை
உள்ளத்திலும் இடமில்லை
இல்லத்திலும் இடமில்லை
வயிறார ஒருநாளும்
பசியாறியதில்லை !
பார்த்தவளோ பெற்ற மகள் ....
இன்று தாயிழந்த கன்றாய்
பரிதவித்து நிற்கின்றாள் ....!!

நான் பெற்ற பிள்ளைகளா .....!!
பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்
என் பேரப் பிள்ளைகளும் ....!!
உங்களுக்கும் வயதாகும் .....
யார் தயவிலும் வாழாதீர் ...
பக்குவமாய் நடந்திடுவீர் ....
இல்லையேல் ...
நாளைக்கு உங்களுக்கும்
என் நிலையே .....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (3-Jul-14, 9:41 pm)
Tanglish : iruthi yaaththirai
பார்வை : 79

மேலே