உயிரிசை

எல்லா பறவைகளும்
விழித்துவிட்ட நேரம்
அனேக மனிதர்கள் விழித்திராத நேரம்...!

விடியவிருப்பதை
கொக்கரித்து
நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் சேவலை
கூன் விழுந்த மூதாட்டி ஒருத்தி
பசும்பால் கறந்த கையுடன் திறந்துவிட
அது சிறகடித்துக்கொண்டு
இரைதேட நடந்தோடுகின்றது...!

ஒரு விடியலை வரவேற்று
ராகங்கள் பலவகை
காற்றினில் தவழ்கின்றன...
பனித்துளிகளில் குளியலிட்ட
மலர்களும் இலைகளும்
அந்த ராகங்களின்
இசைவுக்கேற்ப அசைந்துகொண்டே
தங்களை உலரவிட்டுக் கொண்டிருக்கின்றன...!

இன்பவெள்ளம்
காற்றினில் நிறம்பி வழிகின்றது...
அதன் ஈரத்தினில் வண்ணங்கள்
துளிர்விட்டுக் கொண்டிருக்கின்றன...
வானத்தைச் சூரியன்
நீலமிட்டுத் துவைக்கின்றது...!

பணிமேகங்கள்
இந்த மண்ணினை
முத்தமிட்டுச் சென்ற இரகசியத்தை
மூடி மறைக்கமுடியாமல்
காற்றுவெளி வெளிச்சத்திடம் தோற்கின்றது...!

செங்கதிர் மண்மீது வந்துவிழ
பொன்வண்ணம்
திக்கெட்டும் தெறித்து விழ
அந்த ஒளியின் நீட்சியினில்
இளங்கனவுகள்
ஆங்காங்கே
இமை மடிப்பினில் சுருங்கி
மொட்டுக்கள் வெடிப்பதுபோல்
சட்டென்று உடைந்து
விழியோரம் கரைகின்றன...!

பல கால்களின் நடமாட்டம்
திசையெங்கும் புலப்படுகின்றது...
அழகாக உதித்த
அந்த புதியதொரு உதயம்
அடுத்த ஓர்
இயல்பான நாளின் ஆட்டங்களை
அரங்கேற்றம் செய்யத் துவங்கிவிட்டது...!

மெல்ல மெல்ல
சுதந்திரப் பச்சிகளின்
கீதங்கள் எல்லாம்
பெரும் வெப்பச்சலனத்
தார்வீதிமீது ஓடுகின்ற
வாகனங்களின் இரைச்சலில்
அடிபட்டு வீழ்ந்து
சூடேறி உருகி மடிகின்றன...!

எழுதியவர் : வெ கண்ணன் (12-Jul-14, 11:57 am)
பார்வை : 219

மேலே