தெய்வாதீனம் 5 சென்றது மீண்டது
தெய்வாதீனம் 5: சென்றது மீண்டது!
தெய்வாதீனம் அல்லது கடவுள் புண்ணியத்தில் என்ற தொடர் வழி என் வாழ்க்கையில் நிகழ்ந்த சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில சமயம் சென்றது தொலைந்தது, காணாமற் போனது, திருட்டுப் போனது போன்றவை எதிர்பாரா விதமாக மீள்வதுண்டு. இவையும் (தொலைவதும் தொலந்தே போவதும், தொலைந்தது மீண்டும் கிடைப்பதும் எல்லாம்) தெய்வாதீனமே. அத்தகைய நிகழ்சிகளையே நான் குறிப்பிடுகிறேன்.
தெய்வாதீனம் என்றால் பெரும் ஆபத்திலிருந்தோ, கடும் வியாதியிலிருந்தோ தப்புவத்தான் தான் என்பதில்லை. நாம் சற்றும் எதிர்பாராதது, நம் முயற்சியால் முடியாதது போன்றவையும் தெய்வாதீனமே. தெய்வாதீனம் என்ற சொல்லுக்கு அகராதியில் கூறப்பட்டிருக்கும் விளக்கங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்:
***********************************************************************************************
University of Madras Lexicon:
தெய்வாதீனம் n. id. +adhīna. 1. Divine providence; தெய்வச்செயல்.2. Chance; தற்செயல். Colloq.
தமிழ் தமிழ் அகரமுதலி
தெய்வாதீனம்
தெய்வச்செயல்; தற்செயல், எதிர்பாராநிகழ்ச்சி.
க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து
தெய்வச்செயல்
பெயர்ச்சொல்
(மனித முயற்சியால் இல்லாமல்) தெய்வத்தின் அருளால் நடைபெறும் செயல்; providence. அந்த விபத்திலிருந்து நான் உயிர் தப்பியது தெய்வச்செயல்தான்./ எல்லாம் தெய்வச்செயல், நாம் என்ன செய்ய முடியும்.
***********************************************************************************************
மேற்கு லா ஃபயட் (இந்தியானா) வில் பட்ட மேற்படிப்பு மாணவனாக உழன்று கொண்டிருந்த காலம். Is There Life After Graduate School" என்று ஒரு வாகன ஒட்டியை (Bumper Stickker) வண்டி பின் ஒட்டிக்கொண்டு வாழ்ந்து வருவோம்.
கிறிஸ்துமஸ் - புத்தாண்டு (இலையுதிர் கால அரையாண்டுக்கும் வசந்தகால அரையாண்டுக்கும் இடை) விடுமுறை சமயத்தில் ஓர் இனிய காலை. பனியால் தெருவெங்கும் மூடிக்கிடந்தது.
மேற்கு லாஃபயட் ஒரு பல்கலைக்கழக நகரம். கல்லூரி விடுமுறைநாட்களில் ஊரே வெறிச்சென்றிருக்கும். இளங்கலை மாணவர்கள் அநேகமாக யூ. எஸ். ஏ. வாழ்வோராக இருப்பர். அவர்கள் அவரவர் ஊருக்குப் போய்விட்டிருப்பர். முதுகலை மாணவர்கள் அநேகமாக அயல் நாட்டினராக (இந்தியர், சீனர், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து வந்தோர், முதலியோர்) இருப்போம்.
மணமான மாணவர்கள் குடியிருப்பிலிருந்து (Married Students' Housing) நடந்து போகும் தொலைவில் சிறு கடைத் தொகுப்பு (Small shopping complex) உண்டு.
அந்தக் காலைவேளையில், ஏதோ தோன்றி என்னை அங்கு இருந்த ஃபாலெட் புத்தகக் கடைக்கு இழுத்தது. அங்கே மேல் தட்டில் சிவில் இருந்த இஞ்சினீரிங்க் சிறு குறிப்புப் புத்தகம் (Civil Engineering Handbook) என் கண்ணில் பட்டது. என்னிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருக்கிறது. மக் க்ரா-ஹில்ல் புத்தகக் குழுவில் சேர்ந்த பொழுது இலவசமாகக் கிடைத்த இரண்டு புத்தகங்களில் ஒன்று.
இலவசமாகக் கிடைத்த புத்தகம் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று பார்க்க விழைந்து, புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். உடனே நான் அடைந்தஅதிர்ச்சியை இப்போதும் (33 ஆண்டுகளுக்குப் பின்) உணர முடிகிறது!
அது என்னுடைய புத்தகமேதான்.
கடை மேலாளரிடம் சென்று "இது என்னுடைய பிரதி. யாரோ திருடிக் கொண்டு வந்து உங்களிடம் விற்றிருக்கிறார்கள்." என்று கூறி அப்புத்தகத்தைக் கேட்டேன்.
"நான் விலைக்கு வாங்கிய புத்தகம். வேண்டுமானால் அதற்கான விலையைக் கொடுத்து வாங்கிப் போ" என்றார்! வேறு வழி இன்றி, முதலில் இலவசமாகக் கிடைத்த என் புத்தகத்தை நானே $34.00 கொடுத்து வாங்கி வந்தேன்.
என்னை ஏதோ உந்தித் தள்ள, நான் அந்தப் புத்தகக் கடைக்கு அந்த காலை வேளையில் செல்ல, என்னிடம் இருக்கும் புத்தகமாகவே இருந்தாலும் அங்கு இருந்த புத்தகத்தை எடுத்துப் பார்க்க, சற்றும் எதிர் பாரா விதமாக திருட்டுப் போன என் புத்தகத்தை வேறொருவர் வாங்கிச்செல்லுமுன் மீட்டு வந்தது முற்றிலும் எதிர் பாரா தெய்வச் செயலே!