அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - II - போட்டி கவிதை

நதிபேசும் மொழிகேட்டு ரசித்துக் கொண்டே
........நெடுந்தூரம் மணற்பரப்பில் நடக்க வேண்டும் !
புதிராக இருக்கின்ற எதுவும் எந்தன்
........பார்வையிலே பதில்சொல்லி முடிக்க வேண்டும் !
விதியென்னும் புதைகுழியில் வீழாமல் என்
........விருப்பம்போல் கடைசிவரை வாழ வேண்டும்!
அதிசயமாய் நான்மட்டும் சுவாசம் செய்ய
........ஆக்ஸிஜனும் எனக்குள்ளே சுரக்க வேண்டும் !
கல்லறையில் எனைக்கொண்டு வைத்த பின்னும்
........கரையான்கள் அரிக்காத மேனி வேண்டும் !
சில்லறையாய் எனதுஉடல் சிதையும் போதும்
........சிரிக்கின்ற திடமான உள்ளம் வேண்டும்!
சல்லடையில் வார்த்தைகளைச் சலித்தெடுத்து
........சரித்திரங்ள் படைக்கவரும் சொற்கள் வேண்டும் !
செல்லரித்து நாவில்சீழ் வடியும் போதும்
........சத்தியத்தைத் தவறாத வாக்கு வேண்டும் !
கீச்சென்ற ஒருசொல்லால் பேசும் அந்த
........கிளியுடைய தாய்மொழியை ரசிக்க வேண்டும் !
பூச்சரமாய் நிற்கின்ற பெண்ணை அள்ளி
........பூலோகம் அழியும்வரை ருசிக்க வேண்டும் !
மூச்சற்றுப் போனாலும் மூளைச் செல்லில்
........முணுமுணுப்பாய் கவிதைவரி ஒலிக்க வேண்டும் !
பேச்சற்றுக் கிடக்கின்ற நிலவும் எந்தன்
........பெயர்சொன்ன பின்னால்தான் உதிக்க வேண்டும் !
பனித்துளிக்குள் எப்படியோ நுழைந்து சென்று
........பத்திரமாய் ஓரிரவு உறங்க வேண்டும் !
தனிமையிலே எனைப்பர்த்துக் காதல் செய்ய
........தேவதையும் எனைத்தேடி வருதல் வேண்டும் !
பனிக்கொட்டும் மாதத்தில் குளிர்தணிக்க
........பாய்விரித்துச் சூரியனில் படுக்க வேண்டும் !
இனியெந்தன் இரைப்பையில் தீயை அள்ளி
........இறைத்தாலும் அதைஉண்டும் செரிக்க வேண்டும் !
விரல்நீட்டித் தொடுகின்ற தொலைவில் இங்கே
........விண்மீன்கள் பூக்களாக முளைக்க வேண்டும் !
இரவெல்லாம் மீண்டுமிங்கு விடிவதற்கு
........என்னிடத்தில் உத்தரவு கேட்க வேண்டும் !
சிரமத்தைப் பாராமல் செவ்வாய்க் கோளும்
........எனைபார்க்க கீழிறங்கி வருதல் வேண்டும் !
நிரந்தரமாய் என்கவிதை இனிக்கும் என்றால்
........நடுக்கடலில் இட்டவிதை முளைக்க வேண்டும் !
மழைநீரில் தினம்நனைத்து இயற்கையோடு
........மணிக்கணக்காய் உறவாடி கரைய வேண்டும் !
அழைக்காமல் என்னருகில் எமனும் வந்தால்
........அதையும்நான் கண்டிக்கும் உரிமை வேண்டும் !
பிழைசெய்யா பருவத்தில் தாயின் மார்பில்
........பிள்ளையென பால்குடித்த காலம் வேண்டும் !
உழைக்காமல் என்தேகம் இருந்தால் எந்தன்
........உயிரெடுத்து சிலுவையிலே அறைய வேண்டும் !
தன்னிச்சை செயலாக உண்மை பேச
........தனிநாக்கு எப்போதும் எனக்குள் வேண்டும் !
என்கண்ணில் சூரியனை வைத்துக் கொண்டு
........எனைச்சுற்றி பூமிவர செய்தல் வேண்டும் !
மின்னல்களில் மையூற்றி பேனாவாக்கி
........மின்சாரம் போல்கவிதை எழுத வேண்டும் !
என்னுள்ளே தமிழ்ஞானம் அழியும் என்றால்
........அப்பொழுது அந்நொடியே மரணம் வேண்டும் !
********************************************************************************
பி.கு:
கணினி துறையில் வேலைப் பார்த்தாலும்
கையெழுத்து தமிழிலேயே போட்டு வருகிறேன் இன்றுவரை...