நிறம் மாறும் தமிழ்
கடந்து கொண்டிருக்கும்
இருபதாம் நூற்றாண்டில்
கரைந்து கொண்டிருக்கும்
தமிழ் இனமே... வணக்கம்!
‘அம்மா’ என்றழைப்பை
விரும்பாத அம்மாக்கள்...
பிள்ளைகளின் வயதறியாத
அப்பாக்கள்...
பாட்டனின் பெயரறியாத
குழந்தைகள்...
இவையெல்லாம்
உன் கோலத்தின் அடையாளங்கள்!
•
‘யாதும் ஊரே
யாவரும் கேளீர்’
என்று உரைத்ததை
தவறாக புரிந்து கொண்டானோ
என்னருமைத் தமிழன்???
என்னாட்டிலோ அமர்ந்துகொண்டு
எந்நாடு என்கிறான்...!
•
சுதந்திரம் கிடைத்ததா இல்லையா??
பலருக்குச் சந்தேகம்!
இன்னும் கிடைக்கவில்லை
சுதந்திரம்...
ஆங்கிலத்திடமிருந்து
தமிழுக்கு!
•
அருமை அன்னை தமிழ்த்தாயே...
எத்திசையும் புகழ் மணக்க இருந்தவளே...
சுகம் தானா???
வந்தாரை வாழ வைக்கும்
இத்திருநாட்டிற்கு வந்தோருக்கெல்லாம்
இடம் கொடுத்ததால் தான்
உனக்கிங்கு இடமில்லாமல் போயிற்றோ???
•
பழையன கழித்து
புதியன புகுதல் போகி என்றதால்
பழையதெனக் கருதி
உன்னைக் கழித்துவிட்டனரோ...?
கலக்கம் வேண்டாம்...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல்
பழைமையாய் இருப்பது
உன் குற்றமே...!
•
அன்று உன்னை
களப்பிரர்களிடமிருந்து மீட்டெடுக்க
பல்லவன் வந்தான்...
ஆங்கிளேயர்களிடமிருந்து மீட்டெடுக்க
பாரதி வந்தான்...
இன்று தமிழர்களின் கைகளிலேயே
கொலையுன்று கிடக்கிறாய்!
•
பாராண்ட பைந்தமிழ் தன்னை
பாராத கோலத்தில் பார்த்ததினால்
தீராத கோபத்தால் தூண்டப்பட்டு
கூறாத கூற்றொன்றைக் கூறுகிறேன்...
மக்காள்...
உலக அதிசயங்கள்
ஏழென்பார்
தமிழ் பயிலாதோர்...
என்னைக் கேட்டால்
எட்டென்பேன்...
அதில் முதலாவது
எம் தமிழென்பேன்...!!!